யாழ். நூலகம் எரிப்பு மிகப்பெரிய அவமானம் தென்னிலங்கை வெட்கித் தலைகுனிய வேண்டும் என்கின்றார் மேயர் மணி.
“கடந்த நூற்றாண்டினுடைய மிகப்பெரிய அவமானமே யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் எரிப்புச் சம்பவம். தென்னிலங்கையில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று போராடும் அனைவரும் இந்தச் சம்பவத்தை எண்ணி இன்று வெட்கித் தலைகுனிய வேண்டும்.”
இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண பொதுநூலகம் எரியூட்டப்பட்டதன் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். பொதுநூலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் யாழ். மேயர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது,
“யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய சொத்தாக இருக்கக்கூடிய இந்த நூல் நிலையம் எரித்து அழிக்கப்பட்டு இன்றுடன் 41 வருடங்கள் நிறைவடைகின்றன. தென்னாசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்த இந்த நூலகம் தீயிட்டு எரிக்கப்பட்டது.
விலைமதிப்பற்ற எத்தனையோ புத்தகங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டன. தமிழ் மக்களின் சொத்தாகக் கருதப்படுவது கல்வி என்ற மூலதனம் மட்டும்தான்.
கல்வியை இல்லாமல் ஆக்கி தமிழ் மக்களை வீழ்த்தவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தச் சம்பவம் நடத்தப்பட்டது.
இன்று நாடு எதிர்நோக்கி இருக்கின்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்குக் காரணமான பல அத்திவாரக் கற்களில் இந்த நூலக எரிப்பு ஒரு பிரதானமான அத்திவாரக் கல்லாகக் காணப்படுகிறது.
1981ஆம் ஆண்டு அரச அனுசரணையுடன் இந்த நூலகம் எரித்து அழிக்கப்பட்டது. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு இதுதான் முதல் அத்திவாரக் கல்லாக உள்ளது எனக் கருதுகின்றோம்.
தென்னிலங்கையில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று போராடும் அனைவரும் இந்தச் சம்பவத்தை எண்ணி இன்று வெட்கித் தலைகுனிய வேண்டும்.
கடந்த நூற்றாண்டினுடைய மிகப்பெரிய அவமானம் யாழ். பொது நூலகத்தின் எரிப்புச் சம்பவம். தற்போது தென்னிலங்கையில் போராடுகின்றவர்கள் யாழ். பொது நூலகம் எரிப்புச் சம்பவத்தின் விளைவும், போருக்குள் தள்ளப்பட்டதன் விளைவும்தான் இன்று நடுவீதியில் நிற்பதற்குக் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இனவாதம் அற்ற ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்ற செய்தியை உலகத்துக்குப் பறைசாற்றாமல், இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்பதனை தென்னிலங்கையில் உள்ளவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் இந்த அழிவுகளிலிருந்து மீண்டு வருகின்றார்கள். இந்த நூலகத்தைப் புதுப் பொலிவுடன் மிளிரச் செய்ய வேண்டும். இந்த நூலகம் உலகில் மிகச் சிறந்த நூலகமாக மாறுவதற்கு உறுதி பூண்டு, எதிர்காலத்தில் நாம் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும்” – என்றார்.