யாழ். பொது நூலகம் எரிப்பின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல்.

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது யாழ்ப்பாணம் பொது நூலகத்தை உருவாக்குவதற்குக் காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பாவுக்கும், யாழ். பொது நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன், பிரதி மேயர் து.ஈசன், யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலன், யாழ். பொது நூலக பிரதம நூலகர், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், வாசகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம் பொது நூலகம்1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி தென்னிலங்கையிலிருந்து வந்த வன்முறைக் குழுவொன்றால் தீயூட்டப்பட்டது. நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97 ஆயிரம் அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் அது திகழ்ந்தது.