இராஜாங்க அமைச்சுக் கோரி படுத்துக் கிடக்கும் எம்.பிக்கள் – சாணக்கியன் சாடல்.
“மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்குத் தீர்வை வழங்காமல் இராஜாங்க அமைச்சுப் பதவி தங்களுக்கு வழங்கக் கோரி இம்மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாசஸ்த்தலம் முன்பாக பாய் போட்டுப் படுத்துக் கிடக்கின்றனர்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் இன்று எரிவாயு விநியோகம் செய்யப்படாத காரணத்தால் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதன்போது அங்கு வந்த மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் மக்களிடம் நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் குறித்த பகுதியிலிருந்து மாவட்ட அரச அதிபரையும் தொடர்புகொண்டு மக்களின் நிலைமைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
எனினும், தமது நிலைமைகள் குறித்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பொறுப்பற்ற வகையிலேயே செயற்படுகின்றனர் எனவும், மக்களின் தேவையறிந்து செயற்படவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,
“தற்போதைக்கு எந்தவிதமான எரிவாயு சிலிண்டர் இறக்குமதியும் இல்லை. எதிர்வரும் 4ஆம் திகதி பின்னர்தான் இலங்கைக்கு எரிவாயு சிலிண்டர் கப்பல் வரக்கூடியதாக இருப்பதாக அறியமுடிகின்றது. இரண்டு மாதங்களுக்கு ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் மாவட்டத்துக்குத் தேவைப்படுகின்றபோதும் வெறுமனே 15 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்களைக் கொண்டு வந்து என்ன செய்ய முடியும்?
மேல் மாகாணத்தில் அதிகளவான எரிவாயு சிலிண்டர்கள் வழங்கிவைக்கப்படுகின்றன. அங்குள்ள அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைப்பதற்காக பிரதமருடன் நேரடியாகக் கலந்துரையாடி குறித்த தீர்வுகளைப் பெற்றுக்கொள்கின்றார்கள். ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் முற்றிலும் வித்தியாசமான முறை காணப்படுகின்றது.
ஆகவே, இந்த வீதியில் எரிவாயுவுக்காகக் காத்திருப்பவர்கள் வீதிகளை மறித்துப் போராட்டம் நடத்துவதன் மூலம் பாதிக்கப்படப்போவது எமது மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே.
மட்டக்களப்பிலுள்ள அரச தரப்பைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பாக எங்கேயாவது கதைப்பதை காணவும் இல்லை. ஆனால், இன்று மக்கள் எரிவாயுக்காக வீதிகளில் பாய் போட்டு படுத்து உறங்கும் நிலையில் இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாசலுக்கு முன்பாக தங்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கக் கோரி பாய் போட்டுப் படுத்திருக்கின்றார்கள். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.