ஜிஎஸ்டி கணக்கை மாற்றுவாரா தமிழக நிதியமைச்சர்? – அண்ணாமலை கேள்வி
“அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன் வழங்குவதற்காக, PFRDAவில், 10,436 கோடி ரூபாயை தமிழக அரசு டெபாசிட் செய்யவில்லை” என்று பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தார்.இதற்கு பதிலளித்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “PFRDAவில் டெபாசிட் செய்வதா? டெபாசிட் செய்ய முடியாத ஒழுங்குமுறை ஆணையமான PFRDAவில் இதுவரை வரலாற்றில் ஒருவர் கூட, ஒரு ரூபாய் கூட டெபாசிட் செய்ததில்லை” என்று பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான, 10 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே? இது எங்கே போனது? இப்போதும் நான் கேட்கிறேன். நிதியமைச்சரை பதில் சொல்ல சொல்லுங்கள்” என்றார்.
ஜிஎஸ்டி குழப்பம்
மேலும், “தமிழக நிதியமைச்சர் சட்டசபையில் பேசிய ஜிஎஸ்டி தொகை வேறாகவும், பிரதமர் முன்பு முதல்வர் ஸ்டாலின் பேசிய ஜிஎஸ்டி தொகை வேறாகவும் உள்ளது. இப்போதும் ஜிஎஸ்டி தொகையை நிதியமைச்சர் மாற்றிச் சொல்கிறார். எது உண்மையான தொகை என்று அவர் தான் சொல்ல வேண்டும்.
நிதியமைச்சர், ஜிஎஸ்டி கால்குலேஷனையே மாற்றுவார். அது அவருக்கு கை வந்த கலை.ஆனால், இதற்கு எல்லாம் காரணம் அவர் தான். அவர் ஜிஎஸ்டி கவுன்சிலில் இருக்கிறார். விதிமுறைகளுக்கு எல்லாம் கையெழுத்திட்டு வந்திருக்கிறார்.
ஜிஎஸ்டி விதிமுறையை மீறி, மத்திய அரசு தனது பணத்தை செலுத்தி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை முழுமையாக வழங்கியுள்ளது. தமிழக அரசுக்கு வரவேண்டிய பணம் முழுவதுமாக வந்துள்ளது. இனிமேல், தமிழக மக்கள் நலத்திட்டங்களுக்கு பணம் இல்லை. மத்திய அரசு கொடுக்கவில்லை என்று சொல்லாதீர்கள். அதேநேரத்தில், மத்திய அரசுக்கு, தமிழக அரசு, 25,000 கோடி கொடுக்க வேண்டும். அதை எப்போது கொடுப்பார்கள் என்று கேட்டு சொல்லுங்கள்” என்றார்.