புஷ்பா பாணியில் 4 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தல்.. நெடுஞ்சாலையில் நடந்த சேஸிங் – ஆந்திர போலீஸார் அதிரடி
ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து திருப்பதி – வேலூர் நெடுஞ்சாலையில் ஆந்திர போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு மினி லாரி மற்றும் 3 கார்கள் நிற்காமல் சென்றன. அவற்றை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தினர். சிலர் தப்பிய நிலையில் போளூரை சேர்ந்த பெருமாள் மற்றும் ஆரணியை சேர்ந்த வேலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வாகனங்களில் இருந்த சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செம்மரக்கட்டைகளுடன் 4 வாகனங்களையும் கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடிய வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சி, போளுரை சேர்ந்த பாலாஜி, கல் குப்பத்தை சேர்ந்த அஜித், போளூரை சேர்ந்த வினோத், சரத், சென்னையை சேர்ந்த ரமேஷ்,குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு பேரில் போளுரை சேர்ந்த பெருமாள் என்பவர் மீது செம்மரக்கடத்தல் தொடர்பாக சித்தூர் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.மேலும் இவர் ஆந்திராவிலிருந்து செம்மரங்களை வெட்டி பல்வேறு மாநிலங்கள் வழியாக கடத்துவதில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டார் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.