பிரதமர் வெளியிட்ட அதிரடி தகவல்…
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இம்மாத இறுதியில் நிறைவடையும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன்படி ,ஒன்றிணைந்த வணிக சபை பிரதிநிதிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடன் மறுசீரமைப்புக்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய ,இவ்வருடம் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன்களை மீள செலுத்துவதற்கு 5 பில்லியன் டொலர்களைப் பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் இலக்காகும் எனத் தெரிவித்த அவர், அந்நிய செலாவணி இருப்பை அதிகரிப்பதற்காக மேலும் 1 பில்லியன் டொலர் எதிர்பார்க்கப்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டினார்.
நெருக்கடியை தணிக்க உதவும் எந்தவொரு நிதி ஒப்பந்தமும் சர்வதேச நாணய நிதித்துடனான ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
நன்கொடை வழங்கும் நாடுகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டிய பிரதமர், ஜப்பானுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள இடைவெளியை மீள சரி செய்வதற்கு சிறிது காலம் செல்லும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் ,உணவு பற்றாக்குறை விவகாரத்தில் உரம் மற்றும் உணவு பாதுகாப்பிற்கு சமவுரிமையளிக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.