பிரதமரின் உரை: 2 நாட்கள் விவாதம்.
பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் அரசியல் மறுசீரமைப்பு சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 7 ஆம் திகதி சிறப்புரையாற்றவுள்ளார்.
ஜுன் மாதத்துக்கான முதல்வார நாடாளுமன்ற அமர்வு 7ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமாகின்றது. இதன்போதே பிரதமரின் உரை இடம்பெறவுள்ளது.
பிரதமரின் இந்த உரை உட்பட நாட்டில் நிலவும் பிரச்சினைகள் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் இடம்பெறவுள்ளது.
7 மற்றும் 8ஆம் திகதிகளில் இவ்விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் சம்பந்தமான கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று முற்பகல் நடைபெற்றது. இதன்போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இவ்வார நாடாளுமன்ற அமர்வின்போது குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்படும்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை, மே – 9 சம்பவத்தின்போது கொல்லப்பட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.