நாட்டை அழித்துவிட்டது ராஜபக்ச அரசு! – சஜித் சீற்றம்.
“ராஜபக்ச அரசு இந்நாட்டை அழித்துவிட்டது. இப்போது அதற்கு பகரமாக மீள் சுழற்சி செய்யப்பட்ட ஓர் அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. இவர்கள் முன்னைய அரசை விடவும் தோல்வியடைந்துள்ளனர்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் இளைய தலைமுறையை, தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற, ஸ்மார்ட் கணனி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகமாக கட்டியெழுப்பும் ‘பிரபஞ்சம்’ முன்னோடித் திட்டத்தின் 21 ஆவது கட்டமாக எட்டு இலட்சத்து நாற்பத்தாறாயிரம் (8,46,000) ரூபா மதிப்பிலான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை மேல் மாகாணம், அவிசாவளை ஸ்ரீ ரதனசார மகா வித்தியாலயத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (03) வழங்கிவைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“டொலர்களைச் சம்பாதிக்கப் பல்வேறு சிறந்த வழிகள் உள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்றுமதியை ஊக்குவிப்பது அவற்றில் ஒரு வழிமுறையாகும்.
இன்று அரச நிதி பின்புலம் வெற்றாக உள்ளது. இன்று வக்குரோத்தான அரசும், வக்குரோத்தான நாடுமே உள்ளது. அரசு வங்குரோத்து நிலையில் இருந்தாலும் எதிர்க்கட்சி நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும்.
நாட்டில் இன்று உணவுப் பிரச்சினை உருவாகியுள்ளது. நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களிடமும் உள்ளூர் பயிர்ச்செய்கை உற்பத்தியை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றேன். இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பு வழங்கும்” – என்றார்.