’21’ குறித்து அரவிந்குமார் நீதி அமைச்சருக்கு கடிதம்.
21ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் அமையவிருக்கும் சட்டவாக்க சபையில், சிறுபான்மை சமூகங்கள் சார்பிலும், ஜனாதிபதியால் மூன்று பேர் நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அ. அரவிந்குமார் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்குமார், அனுப்பியுள்ள அவசர கடிதமொன்றிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இக்கடிதத்தின் பிரதிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
தொடர்ந்து அக்கடிதத்தில், 21ஆவது சட்ட திருத்தத்தின் கீழ் அமையவிருக்கும் சட்டவாக்க சபையில் சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில், எந்தவொரு சிறுபான்மை சமூகத்தவரும் கட்டாயம் இடம்பெறவேண்டுமென்று, குறிப்பிட்ட ஆவணத்தில் எந்தவொரு இடத்திலும் உத்தரவாதப்படுத்தப்படவில்லை.
21 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் 02.06.2022ல் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, குறிப்பிட்ட சட்டவாக்க சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டன.
உத்தேச சட்டவாக்க சபையில் சிறுபான்மை சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில், உறுப்பினர்கள் நியமிக்கப்படல் வேண்டுமென்ற கோரிக்கையை நான் அழுத்தமாக முன்வைத்தேன். அவ்வகையில், ஜனாதிபதியியால் ஒருவரை சட்டவாக்க சபைக்கு நியமிக்க வேண்டுமென்ற முன்மொழிவும் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்தது.
நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஒருவரும், வடக்கு, கிழக்கு தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஒருவரும், இந்திய வம்சாவளி மலையக மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஒருவரும், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஒருவரும் என்ற வகையில் நால்வர் அரசியல் திருத்தச் சட்டவாக்க சபைக்கு நியமிக்கப்படல் வேண்டும். அத்தோடு அவர்கள் நால்வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருத்தல் வேண்டும் – என்றுள்ளது.