ரஷ்ய விமானம் இலங்கையில் தடுத்து வைப்பு- ரஷ்ய-இலங்கை உறவு பாதிப்படையுமா?

ரஷ்யாவின் Aeroflot Airbus A330 விமானத்தை இலங்கை அதிகாரிகள் தடுத்து வைத்ததையடுத்து, ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் இலங்கைக்கான தனது விமானங்களை இடைநிறுத்துவதாக ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.

தடையில்லாமல் விமான சேவை இடம்பெறும் என்பதில் நம்பிக்கை இல்லை, இலங்கைக்கான வணிக விமான சேவைகளை நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது.

Aeroflot விமானம் ஜூன் 2 ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மொஸ்கோவிற்கு புறப்படத் தயாரான போது விமானத்தை குத்தகைக்கு எடுக்கும் நிறுவனத்துடன் ஏற்பட்ட வர்த்தக தகராறு காரணமாக அயர்லாந்தில் உள்ள Celestial Aviation Trading Limited நிறுவனம் தாக்கல் செய்த முறைப்பாட்டினை விசாரித்த கொழும்பு வணிக உயர் நீதிமன்றம், ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையை விட்டு வெளியேற தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு ஜூன் 16ம் திகதி வரை அமுலில் இருக்கும்.

இதேவேளை விமானத்தை பறிமுதல் செய்வதற்கான நீதிமன்ற விசாரணை ஜூன் 8, 2022 அன்று திட்டமிடப்பட்டுள்ளது என்று TASS தெரிவித்துள்ளது.

இதேவேளை ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே நேற்று (03) ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக நட்புறவு கொண்ட இருதரப்பு உறவுகளில் அதன் எதிர்மறையான தாக்கத்தைத் தவிர்ப்பதற்காக இந்தப் பிரச்சனையை விரைவில் தீர்த்து வைக்குமாறு இலங்கைத் தரப்பை நாங்கள் வலியுறுத்தினோம்,” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.