கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.. தமிழ்நாடு உட்பட 5 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு உட்பட 5 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்துவருகிறது. இருப்பினும், மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்.
கடந்த ஜனவரியில் தாக்கிய கொரோனா மூன்றாவது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதனையடுத்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது.
அதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில், நாட்டில் தற்போது, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து கொண்டு வருகிறது. தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் நீண்ட நாள்களுக்குப் பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கக் கோரி தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.