டெய்லர்களும் , இலங்கை அரசியல் மாற்றமும்
ஹெர்குலிஸ் டெய்லர்ஸ் என்பது இலங்கையின் பழமையான தையல் கடைகளில் ஒன்றாகும்.
அப்போதிருந்து, எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் மட்டுமல்ல, பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளும் ஹெர்குலிஸ் டெய்லரில்தான் சூட்களைத் தைத்தனர்.
ஹெர்குலிஸ் டெய்லர்ஸ்களுக்கு எம்.பி.க்கள், அமைச்சர்கள், பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கு அளந்து உடலுக்கு ஏற்றவாறான சூட் அல்லது தந்திரமான சூட்களை எப்படி தைப்பது என்பது தெரியும்.
ஆனால் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களின் அரசியல் நலன்களுக்காக இலங்கை அரசியலமைப்பை அவர்களுக்கு ஏற்ற ஏற்ற விதத்தில் தைக்கக் கூடிய ஹெர்குலிஸ் போன்ற பிரபலமான இருவர் உள்ளனர்.
ஒருவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ். மற்றவர் விஜயதாச ராஜபக்ச.
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் அந்த நாட்டுக்கு ஏற்ற அரசியலமைப்பை உருவாக்குகிறது. ஆனால் இந்த இருவரும் தலைவர்களுக்கு ஏற்றவாறு அரசியல் சாசனங்களை உருவாக்குகின்றனர். இந்த இருவருக்கும் கிடைத்த புதிய டெய்லர் அலி சப்ரி .
1994ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற சந்திரிக்கா நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருந்தார்.
ஜே.ஆரின் முட்டாள்தனமான அரசியல் சாசனம் என்று கூறி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைக் குற்றம் சாட்டி வந்தார்.
அவர் விரும்பியபடி அரசியலமைப்பை உருவாக்கும் பணியை ஜி.எல்லிடம் சந்திரிக்கா ஒப்படைத்தார்.
ஜி.எல். 2000 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் அரசியலமைப்பைக் பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார்.
அப்போதைய எதிர்க்கட்சியான ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இறக்கிக் கொண்டு அரசீயலமைப்பை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மூன்றில் இரண்டைப் பெற முடியவில்லை.
2001 இல், ஜி.எல். பீரிஸ் , சந்திரிக்காவுக்கு தேவையான விதத்தில் அரசியலமைப்பை உருவாக்கி அலுத்துப்போய் ரணிலுடன் இணைந்தார்.
2001 பொதுத் தேர்தலில் ரணில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.
ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை சந்திரிகாவின் கையில் இருந்தது. அந்த அதிகாரங்களில் ஒரு பகுதியை ரணில் விரும்பினார். ரணிலுக்கு ஏற்ற அரசியலமைப்பை உருவாக்கும் (தைக்கும்) பணியை ரணில் ஜி.எல். பீரிஸிடமே ஒப்படைத்தார்.
ஒரு வருடத்தின் பின்னர் சந்திரிகாவால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது எனவும், ரணில் அரசாங்கம் கொண்டு வரும் சட்டமூலங்களுக்கு சந்திரிகாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்பிக்கள் மனசாட்சிக்கு இணங்க வாக்களிக்க முடியும் எனவும் ஜி.எல். 18வது திருத்தம் என ஒன்றைக் வரைந்தார்.
இன்று ரணில் விஜயதாச தைக்கப் போகும் சர்வகட்சி செயற்குழு அமைப்பும் ஜி.எல். 18 கொண்டு வந்த விடயமும் கலந்து சேர்க்கப்பட்டுள்ளது.
அப்போதைய தலைமை நீதிபதி சரத் என். சில்வா, ஜி.எல் மற்றும் ரணில் ஆகியோர் வரைந்த , அரசியலமைப்பின் 18 வது திருத்தத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மட்டுமல்ல சர்வசன வாக்கெடுப்பும் தேவை என்றார்.
அக்காலத்தில் சரத் என். சில்வாவின் சீடராக இருந்த விஜயதாச ராஜபக்ச, ஜி.எல். மற்றும் ரணில் தைத்த (உருவாக்கிய) அரசியலமைப்பை நாசப்படுத்துவதற்காக இரவு பகலாக உழைத்தார்.
2005 இல் மஹிந்த ஜனாதிபதியான பின்னர் ஜி.எல் மஹிந்தவுடன் இணைந்தார்.
விஜயதாசவோ ரணிலுடன் இணைந்தார்.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்ற பின்னர் , மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் அரசியலமைப்பை மாற்றியமைக்கத் தீர்மானித்தார்.
மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்தவுக்கு ஏற்றவாறு அரசியலமைப்பை தைக்கும் (உருவாக்கும்) பணியை ஜி.எல்லிடம் , மகிந்த ஒப்படைத்தார் .
1999 ஆம் ஆண்டு முதல் சந்திரிக்கா மற்றும் ரணிலுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் அரசியலமைப்பை உருவாக்கிய ஜீ.எல் , 2011 ல் மகிந்தவுக்கு ஏற்றவிதத்தில் 19வது திருத்தத்தை தயாரித்தார்.
இதன் மூலம் மஹிந்த மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு இருந்த தடை நீங்கியது.
2015ஆம் ஆண்டு ஜி.எல். உருவாக்கிய அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தினை பாவித்து , ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச, தோற்கடிக்கப்பட்டார்.
மைத்திரி ஜனாதிபதியானார், ரணில் பிரதமரானார்.
2002 ஆம் ஆண்டைப் போலவே அப்போது ரணில் நிறைவேற்று அதிகாரத்தை தம் வசமாக்க விரும்பினார்.
பாராளுமன்றத்தை கலைக்க , மைத்திரியிடமிருந்த நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தை துண்டிக்க நினைத்தார்.
2002ஆம் ஆண்டு சந்திரிகாவின் அதிகாரத்தை இல்லாதொழிக்க ரணில் கொண்டு வந்த 18ஆவது திருத்தச் சட்டத்தை , அன்று சீர்குலைத்த அதே விஜயதாச ராஜபக்ச, இம்முறை ரணிலுக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பை உருவாக்க (உடையை தைக்க) முன்வந்தார்.
விஜயதாச 19வது திருத்தச் சட்டத்தை ரணிலுக்கு ஏற்றவாறு உருவாக்கினார்.
எனினும் ரணில் , விஜயதாசவின் கூட்டாளியான அவன்ட் கார்ட் தலைவர் நிஸ்சங்க சேனாதிபதியின் வியாபார நலன்களைப் பாதுகாக்கத் தவறியதால், ரணிலுடன் சர்ச்சையில் ஈடுபட்ட விஜயதாச , மைத்திரியுடன் இணைந்து ராஜபக்சக்கள் நலன் கருதி , அவர்களது வழக்குகளை நீர்த்துப்போக பாடுபட்டார்.
நீதியமைச்சர் என்ற வகையில் பதவி வகித்த விஜயதாச, கோட்டாபயவையோ அல்லது ராசபக்சக்களையோ சிறையில் அடைக்க இடமளிக்கப் போவதில்லை என பகிரங்கமாகச் சொன்னார்.
அதனால் விஜேதாச தனது அமைச்சுப் பதவியை இழந்தார்.
விஜயதாசவினாலேயே உருவாக்கப்பட்ட 19வது திருத்தச் சட்டத்தை அவரே , ரணில், சுமந்திரன் மற்றும் ஜயம்பதி ஆகியோரின் மேற்குலக சதி , என குற்றம் கூறினார்.
2019 ஜனாதிபதித் தேர்தலின் போது 19வது திருத்தச் சட்டம் நாட்டை சீர்குலைக்கும் மரணப் பொறி என்று கூறியதுடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையுடன் கூடிய அரசியலமைப்பை மீள உருவாக்க வேண்டும் எனக் கூறி கோட்டாபயவின் வெற்றியுடன் விஜேதாச இணைந்துகொண்டார் .
2020 ஜனவரியில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி வசம் பாதுகாப்பு அமைச்சு உட்பட எந்தவொரு அமைச்சையும் வைத்திருக்கலாம் எனும் அரசியலமைப்புத் திருத்தத்தை விஜேதாச முன்மொழிந்தார்.
ஆனால் கோட்டாவும் பசிலும் தாங்கள் விரும்பிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க (தைக்க) விஜயதாசவைத் தேர்ந்தெடுக்கவில்லை.
கோட்டாவும் பசிலும் , அந்த பணியை ஜி.எல். மற்றும் அலி சப்ரியிடம் ஒப்படைத்தனர்.
ஜி.எல். மற்றும் அலி சப்ரி ஆகிய இருவரும் , 1978ல் ஜே.ஆரால் தைக்கப்பட்ட ஆடையான திருத்த சட்டத்தை கோட்டாவுக்கு வழங்கியதோடு , பசிலுக்கு இரட்டைக் குடியுரிமையுடன் பாராளுமன்றம் வந்து அமைச்சராகக்கூடிய அரசியலமைப்பு முறையையிலான பசில் – கோட்டா பயனடையும் விதத்திலான உடையொன்றை தைத்துக் கொடுத்தனர்.
விஜயதாச ஆரம்பத்தில் 20வது திருத்தத்தை எதிர்த்து நின்றாலும் , பின்னர் விஜயதாச அதன் பக்கம் சார்ந்து கரணம் அடித்தார்.
கோத்தாவும் ராஜபக்ச குடும்பமும் , தங்களது எதிர்காலத்தை அழிப்பதாக உணர்ந்த , இளைஞர்கள் கோட்டாபயவின் மிரிஹான வீட்டை சுற்றிவளைத்ததோடு , காலிமுகத்திடலில் கோட்டா கோ கோம் போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.
தலைவர்களுக்கு மீண்டும் சூட் தைக்க கூடிய ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளதை உணர்ந்த விஜயதாச ராஜபக்ச, போராட்டம் என்ற போர்வையில் சூட் தைக்கும் வேலையை மேற்கொள்வதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் யோசனையை முன்வைத்து களத்துக்குள் இறங்கினார்.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை தாக்குதல் தொடுக்கப் போன மகிந்தவுக்கு , கடைசியில் வீட்டை விட்டே ஓட வேண்டியிருந்தது.
அதேநேரம் போராட்டத்துக்குப் பயந்து வீட்டுக்குச் செல்வதற்காக சூட்கேஸைத் துடைத்துக் கொண்டிருந்த கோட்டாபயவைச் சந்திக்கச் சென்ற ரணிலும், விஜயதாசவும்,
‘நீங்கள் போகாதீர்கள், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றலாம்’ என்று யோசனை தெரிவித்தனர்.
You are the Man , நீதான் சரியா ஆள் என்று சொல்லி ரணிலை பிரதமராக்கினார் கோட்டா.
இப்போது ரணில் 2002 லும் 2015லும் இருந்தது போன்ற நிறைவேற்று அதிகாரத்தைப் பெற விரும்புகிறார்.
விஜயதாச , 2015 இல் ரணிக்கு பொருத்தமாக தைத்த 19 சூட்டை (உடையை) 21யை உருவாக்க (சூட் தைக்க) பொறுப்பேற்றார்.
அந்த நேரத்தில், விஜயதாச அரசியலமைப்பின் 21 வது திருத்தமாக நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான ஒரு தொகுப்பை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
அதன் மீது கோட்டா சினம் கொள்வாரோ என பயந்து, அந்த சூட்டைக் அற்றிவிட்டு, கோட்டாவுக்கும் ரணிலுக்கும் பொருந்தும் ’21’ என்ற புதிய சூட்டை உருவாக்கினார்.
அது ஒரு சுப்பரான சூட்.
நாடே வீட்டுக்குப் போ என்று சொல்லும் போது போகவே மாட்டேன் எனக் கூறும் கோட்டாவின் நிறைவேற்று அதிகாரத்தை கோட்டாவுக்கு ஏற்ற விதத்தில் பாவிக்கக் கூடிய , மக்களால் தோற்கடிக்கப்பட்டு ஆசனம் கிடைக்காமல் தேசியப்பட்டியலில் இருந்து பதுங்கியவாறு நுழைந்திருக்கும் ரணிலுக்கு நிறைவேற்று அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் சூட்டாகும்.
விஜயதாச தைத்துள்ள பிரமாண்டமான மெஜிக் உடையில் , கோட்டா, ரணில் மற்றும் ராஜபக்ச குடும்பத்துக்கு போட்டு அழகு பார்க்க காத்திருப்பது யார் தெரியுமா?
கடவுச்சீட்டு வழக்கில் சிறை செல்ல வேண்டி வரும் என அச்சத்தோடு இருக்கும் விமல், அவுஸ்திரேலிய வர்த்தக வழக்கில் சிக்கியுள்ள உதய கம்மன்பில, இளைஞர் ஒருவரை வாகனத்தால் மோதிய வழக்கில் சிக்கியுள்ள சம்பிக்க ரணவக்க ஆகியோராகும்.
கோட்டாவின் நிறைவேற்று அதிகாரத்தை காப்பாற்றவும், ரணிலின் பிரதமர் பதவியை காப்பாற்றவும், தங்களுடைய 21 வழக்குகளைக் காப்பாற்றவும் , இந்த மூவரும் பசிலை கப்புட்டா (காகம்) எனச் சொல்லி தங்களது தேவைகளுக்காக இவர்களை பயன்படுத்துகின்றனர்.
நீதியமைச்சராக விஜயதாச, கோட்டாவுக்கும் ரணிலுக்கும் தைத்துக் கொடுத்த சூட்டை விட , விமல், உதய, சம்பிக்க ஆகியோரின் வழக்குகளை காப்பாற்ற அவர்கள் மூவரும் சேர்ந்து தனி சூட்களை தைத்து வழங்குவார்கள்.
விஜயதாச, விமல், உதய, சம்பிக்க, ஆகியோர் தங்களுக்கு பொருத்தமான சூட்களை தைத்துக் கொண்டிருக்க , காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் , ஐக்கிய மக்கள் சக்தியோடு உள்ள கூட்டணி, ஜனதா விமுக்தி பெரமுன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னணி சோசலிச கட்சி ஆகியவை ஒன்றிணைந்து நாட்டுக்கு ஏற்ற அரசியலமைப்பை உருவாக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழில் : ஜீவன்