சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அறநிலையத்துறை நோட்டீஸ்… தீட்சிதர்கள் எதிர்ப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்குகளை ஆய்வு செய்ய உள்ளதாக அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்து சமய அறநிலையத் துறையால் அமைக்கப்பட்ட குழு, வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் சிதம்பரம் கோயிலில் ஆய்வு செய்ய உள்ளதாக தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேம சபேச தீட்சிதர், இந்து அறநிலையத்துறை ஆணையர் மற்றும் துணை ஆணையருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் தன்னிச்சையாக கோயில் ஆவணங்களை கோர முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என்றும், தீட்சிதர்கள் தனி சமய சீர்மரபினர் என உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தீட்சிதர்களின் நிர்வாகம், அறநிலையத்துறை அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என, 2014ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பில் உறுதிபடுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடராஜர் கோயில் நிலங்கள் தனி வட்டாட்சியர் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும், தனி சமய பிரிவினரான தீட்சிதர்களின் நிர்வாகத்தை ஆய்வு செய்ய, அறநிலையத்துறைக்கு தார்மீக உரிமையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள துறைரீதியான நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் என்றும், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் எனவும் கடிதத்தில் பொது தீட்சிதர்களின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.