கேப்சூல் முறையில் நெல் சாகுபடி.. நவீன விவசாயத்துக்கு வித்திடும் விவசாயி
மயிலாடுதுறை மாவட்டத்தில் கேப்சூல்| (Capsule) முறையில் நெல் சாகுபடி செய்து விவசாயி ஒருவர், நவீன விவசாயத்திற்கு வித்திட்டுள்ளார். மாத்திரை வடிவில் விதையுடன் உரமும் கலந்து சிக்கனத்துக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மங்கைநல்லூரைச் சேர்ந்தவர் ராஜசேகர் (51). எம்.காம்., பி.எட்., ஐசிடபிள்யூஏ, டி.சி.ஏ., டிசிபிஏ., பி.ஜி.டி.சி.எம்., டிப்ளமோ இன் அக்ரிகல்சர் போன்ற எண்ணற்ற டிப்ளமோ பட்டப்படிப்பு, பட்டயப் படிப்புகளை படித்துள்ளார். இருப்பினும், வேலை தேடி நகரத்தை நோக்கிச் செல்லாமல், விவசாய தொழிலை விரும்பி ஏற்றுக்கொண்டு, வயல்களை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
குத்தாலம் தாலுக்கா அனந்தமங்கலம் ஊராட்சி கந்தமங்கலம் கிராமத்தில் தனக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மட்டுமே கொண்டு இயற்கை விவசாயத்தில் avar ஈடுபட்டு வருகிறார். தனது வயலில் கருப்புக்கவுனி, சீரகசம்பா, தூயமல்லி, கருங்குறுவை, அறுபதாம் குறுவை, ரத்த சாலி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்துவரும் விவசாயி ராஜசேகர் ஒவ்வொருமுறையும் புதுமையான முயற்சிகளை செய்து பார்க்கவும் தவறுவதில்லை.
தனது ஒரு ஏக்கர் நிலத்தில் இந்த வருடம் அறுபதாம் குறுவை என்கிற பாரம்பரிய நெல் ரகத்தை கேப்ஸ்யூல் முறையில் இவர் நடவு செய்துள்ளார். இதற்காக, கடலைப்புண்ணாக்கு, இலுப்பை புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு மற்றும் பிளான்ட் பிரோமோட்டிங் கிரானுல்ஸ் ஆகியவற்றை 3:1:1:1 என்ற விகிதாச்சாரத்தில் கலந்து உரமாக்கிய விவசாயி ராஜசேகர், அதனுடன் மூன்று நெல்விதைகளையும் சேர்த்து மூடி மண்ணில் விதைக்கிறார். இந்த பாரம்பரிய நெல் விதைகளை ஐசிஐசிஐ பவுண்டேஷன் என்ற தனியார் நிறுவனத்திடம் இவர் பெற்றுள்ளார்.
நாற்றங்கால் அமைத்து பயிரிடுவதை விட, காப்ஸ்யூல் முறையில் நடவு செய்வதால் நேரமும், செலவும் மிச்சமாகிறது என்கிறார் விவசாயி ராஜசேகர். பொதுவாக ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய 30 கிலோ நெல் விதை தேவைப்படும் நிலையில், கேப்சூல் முறையில் நடவு செய்ய வெறும் இரண்டரை கிலோ விதைநெல் மட்டுமே போதுமானது என்றும், பொதுவாக 110 நாள் சாகுபடிக்கு தேவைப்படும் நிலையில் இந்த முறையில் நடவு செய்யும்போது 90 நாட்கள் மட்டுமே தேவைப்படும் என்கிறார்.
மேலும், நடவு முறையில் ரூ.25000 தேவைப்படும் நிலையில், கேப்ஸ்யூல் முறையில் ரூ.15000 மட்டுமே செலவாகிறது என கூறுகிறார் விவசாயி ராஜசேகர்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை…
என்ற குறளில் உள்ள உன்னதத்தை உணர்ந்து பாரம்பரிய விவசாயத்தில் புதுமைகள் செய்யும் விவசாயி ராஜசேகரின் முயற்சியை சக விவசாயிகள் ஆர்வமுடன் உற்று நோக்கி வருகின்றனர்.