குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்துக்கொண்ட இளம்பெண் பலி… தவறான சிகிச்சை காரணம் என உறவினர்கள் புகார்

சென்னை போரூரில் கருத்தடை சிகிச்சை செய்துகொண்ட பெண் உயிரிழந்த சம்பவத்தில் தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி பெண்ணி உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மாங்காடு அருகே முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், ஆட்டோ டிரைவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வினோதினி. இவர்களுக்கு திருமணமாகி சோனியா 5, மோனிஷ் 3, என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்தடை ஆபரேஷன் செய்வதற்காக போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் வினோதினி அனுமதிக்கப்பட்டு அவருக்கு கருத்தடை ஆபரேஷன் கடந்த திங்கள் கிழமை செய்யப்பட்டது.

இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் மீண்டும் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைக்கு வந்தபோது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் கூறியதன் பேரில் வினோதினி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். நேற்று மதியம் 2 மணி அளவில் வினோதினி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் தவறான சிகிச்சையால் வினோதினி இறந்து விட்டதாக போரூரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் தவறான சிகிச்சையால் தான் இறந்தார் என அவரது உறவினர்கள் மற்றும் கணவர் ஆகியோர் திடீரென ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் போராட்டம் நடத்தினார். அதில் இறப்புக்கு நியாயம் வேண்டும் எனவும் இதனை முதல்வர் கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை வளசரவாக்கத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சின்ன போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் வினோதினி என்ற பெண் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் முடிந்து வீட்டிற்கு சென்றார். பின்னர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு வந்தார். இதனை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று இறந்து போய்விட்டார்.

தற்போது இந்த மருத்துவமனையில் 605 சுகப்பிரசவமும், 308 அறுவை சிகிச்சை பிரசவங்களும் மொத்தம் 913 பிரசவங்களும், 376 குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் நடந்துள்ளதாகவும் வினோதினியின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்கு பின்னர் தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.