திருத்தங்களுடனான ’21’ நாளை அமைச்சரவையில்…..
திருத்தங்களுடனான முழுமையான 21 ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டமூல வரைபு நாளை திங்கட்கிழமை அமைச்சரவையில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உத்தேச 21ஆவது திருத்தச் சட்டமூலத்தில், இரட்டைக் குடியுரிமை விவகாரம், பிரதமரை பதவி நீக்கும் விடயம், அமைச்சின் விடயதானங்கள், ஜனாதிபதி அமைச்சுப் பதவியை வகித்தல் உள்ளிட்ட நான்கு பிரதான விடயங்கள் குறித்தும் ஒருமித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய திருத்தங்களுடனான முழுமையாக திருத்தச் சட்டமூல வரைபு நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஓரிரு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் 21ஆவது திருத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பூரணமற்ற வகையில் இந்தத் திருத்தத்தை கொண்டு வராமல் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வை உள்ளடக்கிய வகையில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம். பி.தெரிவித்துள்ளார்.
19ஆவது திருத்தத்திலுள்ள அடிப்படை விடயங்கள் உள்வாங்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 21ஆவது திருத்த யோசனை தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத்தில்கொள்ளவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.