ரஷ்ய சுற்றுலா பயணிகளை நாடு திரும்புமாறு அறிவிப்பு: இலங்கையை விட்டு வெளியேறும் உல்லாச பயணிகள்
“நாங்கள் 14 நாள் பயணமாக இலங்கை வந்து, நாங்கள் ஹிக்கடுவையில் தங்கி இருந்தோம். இந்த திடீர் சூழ்நிலையால், பயணத்தை நிறுத்திவிட்டு திரும்புமாறு ரஷ்ய அரசு எங்களுக்கு அறிவித்தது. அதன்படி, 14 நாள் பயணத்தை 7 நாட்களில் முடித்துக் கொண்டு ரஷ்யா திரும்புவதற்காக ரஷ்ய ஏரோஃப்ளோட்டின் கடைசி விமானத்திற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தோம் என ரசிய சுற்றுலா பயணியான எலேனா விமான நிலையத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
“இலங்கை சுற்றுலா செய்வதற்கு பொருத்தமானது என ரஷ்ய அரசாங்கம் முன்னர் எங்களிடம் கூறியுள்ளது. ஆனால் இந்த திடீர் சூழ்நிலையால் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.
இந்த நாட்டில் பயணிக்க எங்களிடம் டீசல் இல்லை.அதேபோல மின்வெட்டு உள்ளது. இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் நாங்கள் மகிழ்ச்சியுடன் இலங்கையில் இருந்தோம்.
எமது ரஷ்ய சுற்றுலாப் பயணிகளால் இலங்கைக்கு டொலர்கள் கிடைக்கின்றன. ஆனால் இந்த முடிவால் இலங்கை அந்த அந்தஸ்தை இழக்கிறது. இந்த சம்பவம் குறித்து ரஷ்ய அதிபர் கடுமையான முடிவை எடுப்பார்.
அதற்கமைய, இலங்கைக்கான எங்களின் தற்போதைய விஜயங்களை உடனடியாக இடைநிறுத்திவிட்டு நாடு திரும்புமாறு ரஷ்ய அரசாங்கம் எமக்கு அறிவித்துள்ளதாக எலினா மெசென்கோவா ரஷ்ய மொழியில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஒரு சம்பவத்திற்கு பயந்து எந்தவொரு ரஷ்ய சுற்றுலா பயணிகளும் மீண்டும் இலங்கைக்கு வரமாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரஷ்ய அரசாங்கத்திற்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இருந்தபோதிலும், மேற்கத்திய நாடுகளில் உள்ள சிறிய காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முறைப்பாடு இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கான ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு சிக்கித் தவிப்பது ஆச்சரியமாக உள்ளது, இது இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு சவாலானது. இதனால் இலங்கை அந்நியச் செலாவணியை இழக்கும் என்றார் அவர்.