ஆடு மேய்க்க சென்ற சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு – ஆரணியில் சோகம்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் ஆடு மேய்க்கச் சென்ற 2 சிறுவர்கள் ஆற்றுநீரில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஈன்றபாளையம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சிரளபாக்கம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் விக்கி என்ற கோகுல் (14 வயது) வந்துள்ளான். 9-ம் வகுப்பு படிக்கும் கோகுலும் அதேப்பகுதியை மற்றொரு 14 வயது சிறுவனான ரித்தீஷ் இருவரும் ஆரணி ஆற்றில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆடுகளை கரையில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மேலும் சில நண்பர்களுடன் சிறுவர்கள் இருவரும் ஆற்று நீரில் குளித்து மகிழ்ந்துள்ளனர்.
ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவர்கள் இருவரும் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஊத்துக்கோட்டை காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். போலீஸார் சிறுவர்களின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆரணி ஆற்றில் சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோடை விடுமுறையை கழிக்க உறவினர் வீட்டிற்கு வந்து உறவுக்கார சிறுவனுடன் சேர்ந்து ஆரணி ஆற்றில் நீரில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.