பாஜக தலைவர்கள் கூட முதல்வர் ஸ்டாலினை பெருமையாக பேசுகின்றனர் – அமைச்சர் மெய்யநாதன்
இந்தியாவின் இறையாண்மை, வளர்ச்சிக்கு பெரும் தீங்கு மற்றும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒற்றை தலைமையாக இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக திராவிட மாடல் ஆட்சியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார் என்று மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபம் திறப்பு விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு தனியார் திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். பின்னர் கேரளாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த தமிழக அணியில் பங்கேற்ற மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அமைச்சர், “இன்று இந்தியாவின் ஜனநாயகத்தில் இந்தியாவின் இறையாண்மைக்கும் வளர்ச்சிக்கும் பெரும் தீங்கு மற்றும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒற்றை தலைமையாக இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக திராவிட மாடல் ஆட்சியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளங்குகிறார்.
24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நேர்மையாக உழைத்து வருகிறார். எளிமையாக அனைவரிடம் கருத்துக்களை கேட்டு ஒரு கொள்கையின் தடம் மாறாத தலைவரை நாம் பெற்றிருக்கிறோம். 8 வருடமாக உள்ள மத்திய அரசு, தமிழ்நாட்டினுடைய முதலமைச்சரின் நடவடிக்கையை இந்தியா முழுவதும் பிரதிபலிக்கிறது.
பாஜக தலைவர்கள் கூட நம் முதல்வரைப் பற்றி பெருமையாக பேசும் நிலைக்கு நாம் உயர்ந்து இருக்கின்றோம். தமிழன் என்று தலை நிமிர்ந்து நிற்கிறோம் என்றால் அதற்கு காரணம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவருடைய நேர்மையான ஆட்சியும்தான் என்றார்.
மேலும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி வழியில் திசை மாறாத தலைவராக தற்போது தமிழக முதல்வர் நிற்கிறார் என்றும் கூறினார்.