கேரளத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு
கேரளத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்சம் என்ற இடத்தில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவருமே தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
இது குறித்து, கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், “விழிஞ்சம் பகுதியில் 2 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், கவலை கொள்ளத் தேவையில்லை. அப்பகுதியில், சுகாதாரத்துறை நிலைமையை ஆய்வு செய்துள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நோரோ வைரஸ் பாதிப்புக்குள்ளான 2 குழந்தைகளின் உடல்நிலை சீராக உள்ளது” என்று தெரிவித்தார்.
நோரோ வைரஸ் என்பது புது வகையான தீநுண்மி தொற்று இல்லை. பல காலமாக சமூகத்தில் பரவியிருக்கும் ஒரு வகையான பாதிப்புதான் என்றாலும், குளிா் மற்றும் மழைக் காலங்களில் இதன் தாக்கம் அதி தீவிரமாக இருக்கும். அந்த காலங்களில்தான் குழந்தைகள், எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள் மற்றும் முதியவா்கள் அதிக அளவில் இந்நோய்த் தொற்றுக்குள்ளாகின்றனா்.