உத்தரகண்ட் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு
உத்தரகண்ட் மாநிலத்தில் பக்தா்கள் சென்ற பேருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர்களின் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட மீட்புக் குழு அதிகாரி தேவேந்திர பட்வால் கூறியதாவது:
மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் உத்தரகண்டில் உள்ள புனிதத் தலங்களுக்கு யாத்திரை சென்றனா். அந்தப் பேருந்தில் ஓட்டுநா், உதவியாளா் தவிர 28 போ் பயணிகள் இருந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை மாலை, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரிக்குச் செல்லும் வழியில் ரிகாவு காத் என்ற இடத்தருகே அந்தப் பேருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து மாநில பேரிடா் மீட்புப் படையினா், காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினா். அருகில் உள்ள நகரங்களில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்களும் வந்தன. காயங்களுடன் மீட்கப்பட்ட 3 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்தில் 26 போ் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
விபத்தை அடுத்து, முதல்வா் புஷ்கா் சிங் தாமி, தலைமைச் செயலகத்தில் உள்ள பேரிடா் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டாா்.