சிறிபால, அமரவீரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ‘அவுட்’

“கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த முடிவை மீறி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது.”
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் எனதெரியவருகின்றது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டம் மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நடைபெற்றது.
நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர , ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ,துமிந்த திஸாநாயக்க மற்றும் லசந்த அழகியவண்ண ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, “கட்சியில் நாங்கள் வகித்த பதவி பறிக்கப்பட்டுவிட்டது என நீங்கள் அறிக்கை விடுத்துள்ளீர்கள். அப்படி அறிக்கை விடுத்து, எதற்காக சந்திப்புக்கு அழைக்க வேண்டும்? இனி நாங்கள் வரப் போவதில்லை” என்று நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் குறிப்பிட்டனர்.
“நான் அந்த அறிக்கையை விடுக்கவில்லை. கட்சியின் பொதுச்செயலாளர்தான் விடுத்துள்ளார். எது எவ்வாறு அமைந்தாலும், உங்கள் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது” என்று மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
“சர்வகட்சி அரசு என்ற யோசனை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குரியது. எனவே, அதனை ஆதரித்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவதில் தவறில்லை” என்று இதன்போது உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.