’20’ பெரும் சாபக்கேடு! நாட்டுக்காக 21ஐ ஆதரிக்க திகாம்பரம் எம்.பி. அழைப்பு.
“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம்தான் இந்த நாட்டுக்குப் பெரும் சாபக்கேடாக அமைந்தது. எனவே, ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களைப் பகிரும் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாம் ஆதரிப்போம்.”
இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இன்று உச்சக்கட்டத்தில் உள்ளது. இந்நிலைமைக்கு ராஜபக்ச தரப்பே பொறுப்புக்கூற வேண்டும்.
ராஜபக்ச ஆட்சியில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளால்தான் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. எரிபொருள் பிரச்சினைக்கு இன்னும் தீர்வில்லை. புதிய அரசு அமைந்த பிறகும்கூட வரிசைகள் தொடர்கின்றன.
அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. அதற்குத் தமிழ் முற்போக்குக் கூட்டணி முழு ஆதரவையும் வழங்கும். எனினும், 21ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறுவது மொட்டுக் கட்சியின் கைகளில்தான் தங்கியுள்ளது. ஏனெனில் அக்கட்சிக்குத்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் உள்ளது.
21 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறினால்தான் நாட்டில் ஜனநாயகம் மலரும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 19ஐ இல்லாதொழித்து 20 ஐக் கொண்டு வந்ததால்தான் நாட்டுக்குச் சாபம் ஏற்பட்டது.
அதேவேளை, தமிழகத்தால் வழங்கப்பட்ட நிவாரணத்தில் அரசியல் நாடகம் அரங்கேற்றப்படக்கூடாது. மக்களுக்கு நியாயமான முறையில் நிவாரணம் பங்கிடப்பட வேண்டும்.
சஜித் பிரேமதாஸ பிரதமராகி இருந்தால்கூட நான் அமைச்சுப் பதவியை ஏற்றிருக்கமாட்டேன். மக்கள் ஆணையுடன் அமையும் அரசில்தான் அமைச்சுப் பதவியை ஏற்பேன். அதுவும் எமது மக்களுக்குச் சேவை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.
தோட்டப் பகுதிகளில் உள்ள தரிசு நிலங்கள் எமது மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கும் நிவாரணம் அவசியம். அதற்கான வலியுறுத்தல் தொடரும்” – என்றார்.