தேவாலயத்தில் சூப்பாக்கிச் சூடு – 50 பேர் உயிரிழப்பு.
ஆப்பிரிக்காவில் வடமேற்கு மற்றும் வட – மத்திய நைஜீரியாவின் சில பகுதிகள் அதிக அளவில் ஆயுதமேந்திய கும்பல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த கும்பல் கிராமங்களைத் தாக்கி, சமூகங்கள் மற்றும் பள்ளிகளை குறிவைத்து வெகுஜன கடத்தல் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. எனினும், ஒண்டோ மாநிலம் மற்றும் தென்மேற்கின் பிற பகுதிகளில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் அரிதானவை.
இந்நிலையில்,தென்மேற்கு நைஜீரியாவின் ஒண்டோ மாகணத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று மர்ம நபர்கள் நுழைந்து கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் வெடி குண்டு தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இதற்கிடையில், இந்த கொடூர தாக்குதலுக்கான காரணத்தை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் பார்வையிட்ட ஒண்டோ மாநில ஆளுநர் அரகுன்ரின் ஒலுவரோதிமி அகெரெடோலு, இந்த சம்பவத்தை “ஒரு பெரிய படுகொலை” என்றும், இதுபோன்று மீண்டும் நடக்க அனுமதிக்கப்படக் கூடாது”, என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளம் மற்றும் இதற்கான நோக்கம் தெரியாத நிலையில்,இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் செய்தித் தொடர்பாளர் ரெவரெண்ட் அகஸ்டின் இக்வு கூறுகையில், “புனித ஆராதனை நடந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் செயின்ட் ஃபிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தைத் தாக்கினர்.பலர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.