ஜன கண மன : சினிமா விமர்சனம்
‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்… எனினும், வாய்மையே வெல்லும்’ என்பது தான் படத்தின் ஒன்லைன்.
கர்நாடகாவில் மத்தியப் பல்கலைகழகம் ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வரும் சபா மர்யம் (மம்தா மோகன்தாஸ்) மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவரது கொலைக்கு நியாயம் கோரி, மாணவர்கள் களத்தில் இறங்கிப் போராட்டம் நடத்துகின்றனர். போராடிய மாணவர்கள் மீது காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட, இது தொடர்பான விசாரணையை முன்னெடுக்கிறது ஏசிபி சஞ்சன் குமார் ( சூரஜ் வெஞ்சரமூடு) தலைமையிலான குழு. இந்த விசாரணை முறையாக நடைபெற்றதா? சபா மர்யம் ஏன் கொல்லப்பட்டார்? இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன? – இதுதான் ‘ஜன கண மன’ படத்தின் கதை.
பல்கலைக்கழகப் பேராசிரியை சபா மர்யமாக மம்தா மோகன்தாஸ். சில காட்சிகளே வந்தாலும் நிறைவைத் தருகிறார். உண்மையை உடைத்துப் பேசுவதிலும், மாணவர்களை வழிநடத்துவதிலும், நீதிக்கான போராட்டத்தில் துணை நிற்பதிலுமாக ஈர்க்கிறார். ஏசிபி சஞ்சன் குமாராக சூரஜ் வெஞ்சரமூடு. மனுஷன் எந்த கெட்டப் போட்டாலும் அதற்கு பொருந்திப் போகிறார். முதல் பாதி முழுவதையும் தன் தோளில் சுமந்து செல்கிறார். உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகம், வார்த்தைகளை எண்ணிப் பேசுவது, பாவனை, மகனிடம் பாசமான தந்தையாகவும், காவலராக கறார் காட்டுவதிலும், குற்ற உணர்ச்சியில் கூனிக்குறுகும்போதும் நடிப்பில் உச்சம் தொடுகிறார் சூரஜ்.
படத்தின் தொடக்கக் காட்சியில் வரும் பிரித்விராஜ், முதல் பாதி முழுக்க ஆளைக் காணவில்லை. அவரைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இரண்டாம் பாதியில் விஷுவல் ட்ரீட் தருகிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்குமான ஸ்கிரீன் ஸ்பேஸை முதல் பாதி சூரஜ் வெஞ்சரமூடுவுக்கும், இரண்டாம் பாதியைப் பிரித்விராஜுக்குமாக பிரித்திருக்கிறார் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி. வழக்கறிஞராக வரும் பிரித்விராஜுக்கான களம் நீதிமன்றத்தின் அந்தக் குறுகிய அறை மட்டுமே. அந்த அறை முழுக்க அவரது சத்தமும், கோபமும், நடிப்பும், உணர்ச்சிகளுமே பொங்கி வழிகின்றன. இடைவேளைக்குப் பின் தனி ஆளாக ஸ்கோர் செய்து ரசிகர்களிடம் கவனம் பெறுகிறார் பிரித்விராஜ்.
இந்தியாவின் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதி வெறி பற்றிய விவாதங்கள், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள், என்கவுன்டர் கொலைகள், அரசியல் அதிகார துஷ்பிரயோகங்கள் என முக்கியமான பல்வேறு பிரச்சினைகள் குறித்து படம் பேசுகிறது. கல்வி நிறுவனங்களில் நிகழும் மரணங்கள், ரோஹித் வெமுலாவை நினைவுப்படுத்துகின்றன. என்கவுன்டர் குறித்து மக்களிடையே நிலவும் போலித் தீர்வு குறித்து படம் சாடியுள்ளது. காவல்துறை என்கவுன்டரை கொண்டாடும் மக்களின் மனநிலை, அதன் உண்மைதன்மையை அறியாமல் என்கவுன்டரை கொண்டாடுவது, ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை அறியாமல் அதனை உறுதிப்படுத்தாமல், வாட்ஸ்அப் ஃபார்வேடுகளைப்போல பேசுவது உள்ளிட்ட காட்சிகள் கவனம் பெறுகின்றன.
தவிர, படத்தில் அரசியல் குறியீடு காட்சிகள் வெளிப்படையாக அணுகப்பட்டுள்ளன. அதேபோல வசனங்கள்… ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு, கேரளாவின் உணவுக்காக அடித்தே கொல்லப்பட்ட மனு, வட இந்தியாவில் மாட்டிறைச்சி பெயரால் நடக்கும் கொலைகள், இந்தியாவில் வேரூன்றியிருக்கும் சாதிய, நிற, பாகுபாடுகள் குறித்த வசனங்கள் அப்லாஸ் அல்லுகின்றன. நீதிமன்றத்தில் நாட்டின் ஜனநாயகத்தை நோக்கி பிரித்விராஜ் எழுப்பும் கேள்விகள் நம்மை உலுக்கின்றன. அந்த வகையில் மலையாள சினிமா சமூக, அரசியல், பொதுப் பிரச்சினைகள் குறித்து பேசும் படைப்புகளை உருவாக்கி தொடர்ந்து வீறு நடைபோட்டு வருவதை உணர முடிகிறது. அந்த வகையில் இயக்குநருக்கும், படக்குழுவுக்கும் பாராட்டுகள்!
மனிதன் ஒரு சூழ்நிலைக் கைதி என்பதையும், சூழ்நிலைகளே நல்லவனாகவும், தீயவனாகவும் நம்மை பரிமாணப்படுத்துகிறது என்பதை காட்சிப்படுத்திய விதம், அங்காங்கே வரும் ட்விஸ்ட்டுகள், தொடக்கத்தில் நிகழும் மரணம், அதையொட்டி அவிழ்க்கப்படும் முடிச்சுகள் என திரைக்கதையை சுவாரஸ்யத்துடன் பயணிக்கிறது. முன்முடிவுகளையும், கடந்த கால குற்றங்களையும் அளவுகோலாக வைத்து ஒருவரை குற்றவாளியாக்க முடியாது என்பதை ஆணித்தரமாக விளக்குகிறது.
பிரித்விராஜ் கதாபாத்திரப் பின்புலத்தில் தெளிவின்மை, அதீத பிரச்சார பாணி, பொலிட்டிகல் சயின்ஸ் வகுப்பறைக்குள் நுழைந்த உணர்வு முதலானவை பின்னடைவுதான். அதேபோல, இறுதிக்காட்சிகளில் முந்தைய புதிர்களுக்கான விடையைச் சொல்லியாக வேண்டும் என்ற கட்டாயத்தில், பல பின்னணிக் கதைகள், வெட்டி எடிட் செய்யப்பட்டிருப்பது அயற்சியைத் தருகிறது. அந்த வகையில் திரைக்கதையின் கச்சிதத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம். தேவையற்ற இடங்களில் வரும் சோக கீதங்களை தவிர்த்திருந்தால் படத்தை இன்னும் கூட விரைவாக முடித்திருக்கலாம்.
சுதீப் எலமன் ஒளிப்பதிவில் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஜேக்ஸ் பெஜாய் பிண்ணனி இசை, காட்சிகளின் உணர்வுகளை பிசகாமல் நமக்கு கடத்துவதில் பலம் சேர்க்கிறது. எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் இறுதிக்காட்சியின் நீளத்தை குறைக்க முற்பட்டியிருக்கலாம்.
மலையாளம்தான் அசல் என்றாலும், பார்வையாளர்களுக்கு எந்த இடத்திலும் துருத்தாமல் நேரடி சினிமா பார்க்கும் அனுபவமே கிடைக்கிறது. அந்த அளவுக்கு தமிழ் டப்பிங் சிறப்பு.