இழுபறியில் ’21’ அமைச்சரவை அனுமதி இல்லை.
அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களையும் உள்ளடக்கிய வகையில் அமைச்சரவையில் நேற்று (06) முன்வைக்கப்பட்ட 21 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை. இதனால் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்திலும் இழுபறி நிலை தொடர்கின்றது.
அரசமைப்புக்கான உத்தேச 21ஆவது திருத்தச் சட்டமூலத்திலுள்ள சர்ச்சைக்குரிய சில விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, இணக்கப்பாட்டை ஏற்படுத்திய பின்னர், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் அது சம்பந்தமாக முடிவெடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சர்வகட்சி அரசு என பெயரிடப்பட்டுள்ள அரசின் அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை, ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
இதன்போது திருத்தியமைக்கப்பட்ட உத்தேச 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சுப் பதவியை மட்டும் வகிப்பதற்கு 21 இல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், பிரதமரைப் பதவி நீக்குவதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் சம்பந்தமாக சர்ச்சை நீடிக்கின்றது.
நாடாளுமன்றத்தின் அனுமதி இருந்தால் மட்டுமே ஜனாதிபதியால் பிரதமரை நீக்க முடியும், மாறாக தனது இஷ்டப்படி அதனைச் செய்ய முடியாது எனச் சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் எட்டப்பட்டிருந்தாலும், அதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி உடன்படவில்லை.
பிரதமரை நேற்றுமுன்தினம் நேரில் சந்தித்து, இது தொடர்பில் ‘மொட்டு’ கட்சி உறுப்பினர்கள் தெரியப்படுத்தி இருந்தனர்.
எனவே, பிரதமர் மீது நாடாளுமன்றத்துக்கு நம்பிக்கை இல்லை என ஜனாதிபதி கருதும் பட்சத்தில், அவரைப் பதவி நீக்கலாம் என்ற ஏற்பாட்டை 21 இல் உள்ளடக்குவது பற்றியும் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
21ஐ நிறைவேற்றுவதற்கு ‘மொட்டு’க் கட்சியின் ஆதரவு அவசியம் என்பதால், இந்த விடயத்தில் பிரதமர் தரப்பிலும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் உள்ளது.
அமைச்சு நியமனம், நீக்கம், விடயதான ஒதுக்கீடு என்பவற்றிலும் இழுபறி தொடர்கின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே 21 இற்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை.
இரட்டைப் பிரஜாவுரிமை உடையவர்கள் எம்.பி. பதவியை வகிப்பதற்குத் தடை விதிக்கும் யோசனைக்கு எந்தவொரு தரப்பும் எதிர்ப்பில்லை என நீதி அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை, ஜனாதிபதிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு நடைபெற்றது. இதன்போது அரசமைப்பு மறுசீரமைப்பை விடவும், பொருளாதார மேம்பாடே அவசியம் என மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரதமரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
அரசமைப்புக்கான 21 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறிய பின்னரே, இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது பற்றி ஆராயப்பட்டு வருகின்றது. 21 இற்கு முன்னர் இதனை நியமிக்குமாறு சிலர் கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.