கொரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்.. பள்ளிக் கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திருமண வயதை எட்டுவதற்கு முன்பே கொரோனோ காலக்கட்டத்தில் மாணவிகளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து முடித்த அதிர்ச்சி தகவல் பள்ளிக்கல்வித்துறை ஆய்வில் அம்பலமாகியுள்ளது. கொரோனோ காலகட்டத்தில் அவ்வாறு திருமணம் முடித்து இடைநின்ற 511 மாணவிகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கல்வித்துறை மாணவிகளை பள்ளியில் சேர்த்துள்ளது
கொரோனோ முதல் அலையின் தாக்கம் குறைந்த பின் முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டபோது ஏராளமான மாணவர்களும்,மாணவிகளும். பள்ளிகளுக்கு நெடுநாட்கள் வராமல் இருப்பதை பள்ளிக்கல்வித்துறை கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் வாயிலாக இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வர பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக களமிறங்கியது.
அப்போது ஏராளமான மாணவர்கள் வேலைகளுக்கு செல்வதை கண்டறிந்து அத்தகைய மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அதேபோன்று மாணவிகளை பொருத்தவரை 8ம் வகுப்பு பயிலும் மாணவி தொடங்கி 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் வரை பெற்றோர்கள் திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். அந்த வகையில் 511 மாணவிகளுக்கு திருமணம் முடிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்து அந்த மாணவிகளை அரசு அதிகாரிகளின் உதவியோடு மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நெடு நாட்களாகவே குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதன் காரணமாக அதிக அளவு நடைபெற்றுவந்த குழந்தை திருமணங்கள் குறைந்திருந்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித் துறை நடத்திய ஆய்வில் எட்டாம் வகுப்பு முதலே மாணவிகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக கொரோனோ காலக்கட்டத்தில் இத்தகைய குழந்தை திருமணங்கள் அதிகளவு நடந்தேறியுள்ளது.
திருமணமான மாணவிகள் வகுப்பு வாரியாக விவரம் வருமாறு
11ம் வகுப்பு மாணவிகள் 417 பேரும், 12ம் வகுப்பு மாணவிகள் 2 பேரும் , 9ம் வகுப்பு மாணவிகள் 37 பேரும் , 10ம் வகுப்பு மாணவிகள் 45 பேரும் , 8ம் வகுப்பு மாணவிகள் 10பேரும் என 511 மாணவிகளுக்கு பெற்றோர்கள் நடத்தி முடித்துள்ளனர். இந்த மாணவிகள் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கையால் மீண்டும். பள்ளிகளில் சேர்க்கப்பட்டு அவர்களின் கல்வி தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போக்கு நகர்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் அதிக அளவு நெடுங்காலமாகவே நடைபெற்று வருகிறது. அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி வந்தாலும் குழந்தை திருமணங்களை முழுவதுமாக தடுக்க இயலாத ஒரு நிலை இருந்து வருகிறது.
இதுபோன்ற குழந்தை திருமணங்களுக்கு முக்கியமான காரணியாக கருதப்படுவது வறுமையே பெண் குழந்தைகளுக்கு திருமணத்தை விரைவாக நடத்தி முடித்து விட்டாள் வறுமையின் பிடியில் இருந்து தப்பலாம் என்கிற எண்ணமே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என தெரிவிக்கின்றனர். இன்னும் கூடுதல் விழிப்புணர்வு அரசுத்தரப்பில் மேற்கொண்டு இதுபோன்ற குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.