தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் செயல்பட அனுமதி: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் 24 மணி நேரமும் செயல்பட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு, , கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஒழுங்கு முறை சட்ட மசோதாவை இறுதி செய்தது. இந்த மசோதா கடைகள், சினிமா அரங்கங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கியது. இதனை மாநில் அரசுகள் தங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்தோ, அல்லது மசோதாவில் உள்ளபடியோ நடைமுறைப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் முதல் மாவட்டமாக மதுரையில் 24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம் என தமிழக அரசு கடந்த 2019 ஆண்டு ஆண்டு அரசாணை வெளியிட்டது. இந் நிலையில் 2020 ஆம் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
தற்போது தமிழகம் முழுவதும் கடைகள் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட மீண்டும் அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10 ஊழியர்கள் உள்ள கடைகள் 24 மணி நேரம் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகள் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு வாரத்தில் 1 நாளாவது விடுப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் நேர ஊதியம் உட்பட அனைத்து ஊதியமும் ஊழியர்களின் சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட வேண்டும், கூடுதல் நேரத்தையும் சேர்த்து நாளொன்றுக்கு 10.30 மணி நேரத்திற்கும் வாரத்திற்கு 57 மணி நேரத்துக்கும் மேல் ஊழியர்களை வேலை செய்ய அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
பெண் ஊழியர்களின் அனுமதி பெற்றே அவர்களுக்கு இரவு பணி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.