அங்கன்வாடி மையங்களின் பணி என்ன? எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்த முடியுமா? உண்மை நிலவரம்..
அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், ஆங்கிலவழிக் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிக அளவில் அரசு பள்ளிகளில் மாணவர்களை ஈர்க்கும் வகையில், முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவங்கப்பட்டன. இதற்காக 2,381 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன.
இதற்காக, தொடக்கக் கல்வித் துறையிலிருந்து ஆசிரியர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு பெற்றோர் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பு இருந்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்ந்தனர். இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் இந்த இரு வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறாது என கல்வித் துறை தெரிவித்தது.
தற்போது மீண்டும் சமூகநலத் துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறையும் சூழல் உருவாகியிருக்கிறது.
மேலும் இந்த வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அரசு பள்ளிகளில் நிறுத்தப்படவில்லை. எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
அங்கன்வாடி மையங்களின் பணி என்ன?
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படுவதில்லை, மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அங்கன்வாடி பணியாளர்கள் தயார் செய்து அளிப்பதுடன், ஆடல், பாடலுடன் இணைந்த கல்வியை கற்பித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 54,439 அங்கன்வாடி மையங்களில் சுமார் 25 லட்சம் குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
மாணவர்கள் காலை 8.30 மணிக்கு அங்கன்வாடி மையங்களுக்கு வருவார்கள். மாணவர்கள் வருகைப் புரிந்த உடன் சத்தான உணவை அளிக்கும் வகையில், உருண்டை பிடித்து தர வேண்டும். அதன் பின்னர் கஞ்சி வைத்து தர வேண்டும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டத்தின் மூலம் தயார் செய்து தரப்பட்டுள்ள புத்தகங்களில் இருந்து தமிழ்வழியில் கல்வியை கற்பிக்க வேண்டும்.
அங்கன்வாடியில் பணியாற்றுவதற்கு 10ம் வகுப்பு தகுதிப் பெற்றவர்கள் தேர்வுச் செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு மாண்டிச்சேரி பயிற்சி அளிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 3 வயது முதல் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை சேர்த்து வருகிறோம்.
அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து பரிசோதனை முறையில் மட்டுமே துவக்கினோம்.
பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு ஆங்கில வழியில் கல்வி கற்பித்தோம். பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் எடுத்துக் கொண்டனர். எனவே அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே உள்ள நடைமுறையில் மாணவர்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு, கற்பித்தல் பணிகள் நடைபெறும் என சமூக நலத்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.