ஆன்மீகத்தோடு அறிவியலையும் இணைத்து புதுவிதமான பூங்கா காரைக்காலில் திறக்கப்படும்: தமிழிசை சௌந்தரராஜன்
ஒரு நாள் அரசு முறைப் பயணமாக இன்று காரைக்கால் வந்த துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. மாவட்டத் துணை ஆட்சியர் ஆதர்ஷ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.பின்னர், துணைநிலை ஆளுநர் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார். புறநோயாளிகள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடத்தைப் பார்வையிட்டார்.
சுகாதாரத் துறைச் செயலர் உதய குமார், துணைநிலை ஆளுநரின் செயலர் அஜித் விஜய் சௌதரி, சுகாதார துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, மருத்துவமனை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, காரைக்கால் அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜிப்மர் மருத்துவமனையோடு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஜிப்மர் மருத்துவமனையின் ஒத்துழைப்போடு மருத்துவமனையை மேம்படுத்த அரசு திட்டம் உருவாகி இருக்கிறது. கட்டிடம் கட்டுவதற்கான வாய்ப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் பகுதியில் உள்ள மக்களுக்கு சிறப்பான சேவைகள் அளிக்கக் கூடிய சிறந்த மருத்துவமனையாக விரைவில் மேம்படுத்தப்படும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சை பிரிவுகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. முதலமைச்சருடன் கலந்தாலோசனை செய்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனையடுத்து காரைக்கால் சுற்றுலா மேம்பாடு சம்பந்தமான ஆய்வுக் கூட்டம் துணை நிலை ஆளுநர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ், துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் செளதரி, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
காரைக்காலில் தற்போது நடைபெற்று வரும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து படக்காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர் விளக்கினார். கூட்டத்தில், காரைக்கால் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் திருநள்ளார் சனீஸ்வரன் கோயில் வழிபாடு செய்தார்.
அதனை அடுத்து ஆன்மிகப் பூங்காவை பார்வையிட்டு அங்கு மரக்கன்றுகள் நட்டார். ஆன்மீக பூங்கா திட்டப்பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரிவாக விளக்கம் அளித்தனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர், நவக்கிரக மண்டபங்கள், தியான மண்டபம், மூலிகைத் தோட்டம், லேசர் ஒளி அமைப்பு ஆகியவை கொண்ட ஆன்மிகப் பூங்காவிற்கான பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும். பெரியவர்கள் குழந்தைகள் என்று எல்லா மக்களையும் இயக்கக்கூடிய ஒரு பூங்கா ஆன்மீகத்தோடு அறிவியலையும் இணைத்து புதுவிதமான பூங்கா விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்படும்.
காரைக்கால் பகுதிக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. சாலைவழி, நீர்வழி, ஆகாய வழியாக காரைக்காலை மற்ற பகுதிகளோடு இணைக்கப்பட உள்ளது. காரைக்கால் ஆன்மீக நகரமாக இருப்பதனால் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக வளர்ச்சி அடைய வாய்ப்பு இருக்கிறது. எல்லோரும் பெருமைப்படும் அளவுக்கு காரைக்கால் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இது ஆன்மிக நகரம், பண்டைய நகரம் பண்பாட்டு நகரம் என்று கூறினார்.