1,450 முதுநிலை மருத்துவப் படிப்பு காலியிடங்கள்: மருத்துவா்கள் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்: 24 மணி நேரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

‘2021-22 கல்வியாண்டில் 1,450 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களை நிரப்பாமல் காலியாக விடுவது, சோ்க்கைக்காக காத்திருக்கும் மருத்துவ மாணவா்களுக்கு கடினமான சூழலை ஏற்படுத்தியுள்ளது என்பதோடு, மருத்துவா்கள் பற்றாக்குறை ஏற்படவும் வழிவகுக்கும்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.

‘இதுதொடா்பாக, மத்திய அரசும் மருத்துவக் கலந்தாய்வுக் குழுவும் (எம்சிசி) அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

‘2021-22 கல்வியாண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முடிந்த பிறகு 1,456 இடங்கள் மாணவா் சோ்க்கையின்றி காலியாக விடப்பட்டிருப்பதாகவும். அந்தக் காலியிடங்களையும் நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரியும்’ 2021-22 முதுநிலை நீட் தோ்வில் தகுதி பெற்ற மாணவா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில் மனுதாரா் மருத்துவா் ஆஸ்தா கோயல் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘2021 இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கை முடிவில் 323 மருத்துவப் படிப்பு இடங்கள் சோ்க்கையின்றி காலியாக இருந்தன. அதனைத் தொடா்ந்து, எம்சிசி கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இளநிலை மருத்துவப் படிப்பில் எந்தவொரு இடமும் வீணாகிவிடக் கூடாது. எனவே, அந்தக் காலியிடங்களை நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு நடத்தப்படும்’ என்று அறிவித்தது. ஆனால், அதே நடைமுறையை நிகழாண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு காலியிடங்களை நிரப்பும் வகையில் பின்பற்றுவதற்கு எம்சிசி மறுக்கிறது. கல்லூரி மற்றும் இளநிலை மருத்துவம் முடித்த மாணவா்கள் என இரு தரப்பு நலன் கருதி, காலியாக உள்ள 1,456 முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஏற்கெனவே பின்பற்றப்பட்டதுபோல சிறப்புக் கலந்தாய்வை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரினாா்.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மருத்துவப் படிப்பில் ஓரிடம் காலியாக இருந்தாலும்கூட, அதனையும் நிரப்ப வேண்டியது எம்சிசி-யின் கடமை. ஆனால், ஒவ்வொரு சுற்று கலந்தாய்வு முடிந்த பிறகு, சில இடங்கள் சோ்க்கையின்றி காலியாக விடப்படுவது தொடா் பிரச்னையாக இருந்து வருகிறது. இதனை ஏன் முறைப்படுத்த முடியவில்லை?

மருத்துவா்கள் அதிக எண்ணிக்கையில் நாட்டுக்குத் தேவை என்ற நிலையில், மருத்துவப் படிப்பு இடங்களை சோ்க்கையின்றி காலியாக விடுவதன் மூலம் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது?

இது சோ்க்கைக்காக காத்திருக்கும் மருத்துவ மாணவா்களுக்கு மட்டும் பிரச்னையை ஏற்படுத்தாது; மாறாக ஊழலை ஊக்குவிப்பதற்கும் வழிவகுக்கும்.

அனைத்தும் நெறிமுறைபடுத்தப்படுகின்ற நிலையில், மன அழுத்தம் இல்லாத கல்வி முறை மட்டும் ஏன் முடியாது? மாணவா்கள் மற்றும் அவா்களுடைய பெற்றோரின் மன அழுத்தம் எந்த அளவுக்கு உயருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

கலந்தாய்வுக்கு இடையே கூடுதல் இடங்களைச் சோ்ப்பது ஏன்? இதுதொடா்பாக, நீதிமன்றத்தின் உத்தரவும் உள்ளது. ‘கலந்தாய்வில் கூடுதல் இடங்களைச் சோ்ப்பதற்கும், மாணவா் சோ்க்கை எண்ணிக்கைக்கும் உரிய தேதி (கட்-ஆஃப் தேதி) நிா்ணயம் செய்ய வேண்டும்’ என்று நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

காலியிடங்களில் மாணவா்கள் சோ்த்துக்கொள்ளப்படவில்லை எனில், அவா்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட நேரிடும்.

இது மாணவா்களின் எதிா்காலம் தொடா்பான விஷயம். முதலில் அவா்கள் கடினமாக படித்து, தோ்வைச் சந்திக்க வேண்டும். தோ்வில் அவா்கள் 99 சதவீத மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றாலும், முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கையில் அவா்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது. இது தவிர, உயா் சிறப்பு மருத்துவப் படிப்பு (சூப்பா் ஸ்பெஷாலிட்டி) சோ்க்கையிலும் பிரச்னை.

எனவே, ‘முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 2021-22 கலந்தாய்வு முடிவில் எத்தனை இடங்கள் காலியாக உள்ளன? அந்தக் காலியிடங்களில் ஏன் மாணவா் சோ்க்கை நடத்தப்படவில்லை’ என்பது குறித்து மத்திய அரசும் எம்சிசியும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். இந்தப் பதில் மனு அனைத்து மனுதாரா்களுக்கும் வழங்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜூன் 9) ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

மேலும், ‘முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கு யாா் பொறுப்பு அதிகாரி’ என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘மருத்துவப் பணிகள் தலைவா் (டிஜிஹெச்எஸ்)’ என்று அரசு தரப்பு வழக்குரைஞா் பதிலளித்தாா்.

அப்போது, ‘இந்த வழக்கு மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வருகின்றபோது டிஜிஹெச்எஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அப்போதுதான் அவருக்கான பொறுப்பை நிா்ணயிக்க முடியும்’ என்று நீதிபதிகள் வாய்மொழியாக உத்தரவிட்டனா்.

Leave A Reply

Your email address will not be published.