கோட்டா பதவி விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் நாடாளுமன்றத்தையும் கலையுங்கள் என்கிறார் சுமந்திரன்.
“நாடு இன்று இத்தகைய மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குவதற்குப் பெருமளவு பொறுப்பேற்க வேண்டியவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சதான். தனி மனிதராக அவர் இழைத்த தவறுகள்தான் இந்த நிலைமைக்கு முழுக் காரணம். அதனால் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும்.
அதேநேரம், நாடாளுமன்றமும் தனக்கான ஆணையை – தனித்துவத்தை – ஸ்திரத்தன்மையை – நம்பகத்தன்மையை இழந்து விட்டது. அதனால் அதனையும் கலைக்க வேண்டும். அந்த இரண்டையும் செய்தால்தான் நாம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வாய்ப்புக் கிட்டும்.”
இவ்வாறு நாடாளுமன்றத்தில் காட்டத்துடன் விவரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
நேற்றைய சபை அமர்வில் அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது:-
“நாடு முன்னெப்போதுமில்லாத மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு தடவையும் இந்த நாடாளுமன்றம் கூடும்போதும், இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான ஏதேனும் முன்னேற்றம் வராதா என்று மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
கோட்டாபய ராஜபக்சவின் கடந்த ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்த்தீர்களானால் – இப்போது வாசிப்பீர்களானால் நீங்கள் இன்றைய பட்டினி நிலையால் சாவதற்கு முன்னர், சிரித்து வயிறு வலித்துச் செத்து விடுவீர்கள்.
அதில் தான் ஆட்சிக்கு வந்தால் வருமான வரியைக் குறைப்பேன் என்று தொடங்கி, பல்வேறு வரிகளை நீக்குவது பற்றிய பட்டியலை வெளியிட்டு இருக்கின்றார். பெறுமதி சேர் (வற்)வரியையும் தேசக் கட்டுமான வரியையும் 17 விதத்திலிருந்து வெறும் 8 வீதமாகக் குறைப்பேன் என்றார். பல்வேறு வரிகளை அடியோடு இல்லாமலாக்குவது பற்றி அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். பெரும் வரி சலுகைகள், வரி நீக்கங்கள் ஆகியவற்றைத் தேர்தல் வாக்குறுதியாக அவர் அறிவித்திருக்கின்றார். அவற்றை இங்கு நான் ஆவணமாகச் சமர்ப்பிக்கின்றேன்.
இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டதும் இது குறித்துக் கவனமெடுத்து 2019 ஒக்டோபர் 19ஆம் திகதி ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை கூட்டி விடயத்தை மக்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தார் அப்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீர. இந்தத் தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படுமானால் நாடு மிக விரைவில் லெபனான் மற்றும் வெனிசுலா நிலைமையை அடைந்துவிடும் என்று அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் எச்சரித்தார் மங்கள சமரவீர.
நாட்டின் துரதிஷ்டம் அது அப்படியே நடந்துள்ளது. மங்கள சமரவீரவுக்கு அதிர்ஷ்டம் போலும் இந்த மோசமான, அவல நிலையை நேரில் பார்ப்பதற்கு அவர் இங்கு இப்போது நம் மத்தியில் இல்லை.
அத்துடன் விடயம் முடியவில்லை. 2019 ஒக்டோபர் 30ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவின் இந்த வரி விலக்குக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பதை ருவிட்டர் செய்தி மூலம் மங்கள சமரவீர அம்பலப்படுத்தினார்.
“கோட்டாபய ராஜபக்சவின் இந்த வரி விலக்கு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கை வங்குரோத்து நிலை, கடன் மீளச் செலுத்த முடியாத கட்டம், கிரீஸ் நாட்டின் பாணியிலான கடன் நெருக்கடி ஆகியவற்றை நோக்கி கடுகதி ரயிலில் பயணிக்கும் நிலைமை ஏற்படும். வற் வரி கழிவு மட்டும் சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான முழு செலவுக்குச் சமமானதாக இருக்கும்” – என்று மங்கள எச்சரித்தார். அவர் எச்சரித்தபடி அப்படியே நடந்து இருக்கின்றது.
ஆகவே, இந்த நிலைமை வரும் என்று யாரும் முன்னர் எதிர்பார்த்து எச்சரிக்கவில்லை என்று கூறமுடியாது. இந்தத் திட்டத்தை கோட்டாபய ராஜபக்ச அறிவித்தபோதே நாட்டின் நிதி அமைச்சர் இது மோசமான நிலைமையை ஏற்படுத்தும் என எச்சரித்திருந்தார்.
இந்த வரி விலக்கு அறிவிப்பால் மாத்திரம் நாடு முழுசாக இந்த நிலைமைக்கு வந்துவிட்டது என்று நான் கூறவரவில்லை. ஆனால், அந்த நிலையை நோக்கி நாடு நகர்வதற்கான வாசலைத் திறந்துவிட்டது இந்த பொருத்தமற்ற வரி விலக்கு நடவடிக்கைதான்.
2020 ஏப்ரலிலேயே இலங்கை மத்திய வங்கி நாடு இத்தகைய ஆபத்து நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதை இரகசிய அறிக்கைகள் மூலம் நாட்டுத் தலைவருக்கு எச்சரித்திருந்தது. இந்த நிலைமை தொடர்ந்தால் எந்த நாட்டிடமும் புதிதாகக் கடன் கூட வாங்க முடியாது என்ற உண்மையை அரசுக்கும் மத்திய வங்கி தெரிவித்திருந்தது.
கடைசியாக 2020 ஜூலை – ஓகஸ்டில் சர்வதேச நிதி கட்டமைப்பிலிருந்து நாம் ஒதுக்கப்பட்டோம். அவ்வளவுதான். அதுதான் நடந்தது.
இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு முற்றும் முழுதுமாக காரணமான தனிநபர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சதான். அவரே இன்றும் நாட்டின் தலைவர்.
சிலர் இந்த விடயத்தை அரசியலாகப் பார்க்காதீர்கள், அப்படியே விட்டுவிட்டுப் பொருளாதாரப் பிரச்சினைகளை நோக்குங்கள் என்று ஜனாதிபதி சொல்லுகின்றார். சரிதான்.
அப்படி செய்யலாம். பொருளாதாரத்தைத் திருத்துவதானால் தவறிழைத்தவரை முதலில் நீக்க வேண்டும். அவரை வைத்துக்கொண்டு பொருளாதாரத்தை நிமிர்த்தமுடியாது. இந்த மோச நிலைமை ஏற்பட்டதற்கு மிக முக்கியமான – பெருமளவு பொறுப்பான ஒரே நபரை நாட்டின் தலைவராக வைத்துக்கொண்டு எப்படிப் பொருளாதாரத்தைத் திருத்த போகின்றீர்கள்?
ஏன் பிரதமர் இராஜிநாமாச் செய்தார்? ஏன் முழு அமைச்சரவையும் இராஜிநாமா செய்தது? ஏன் மத்திய வங்கியின் ஆளுநர் இராஜிநாமா செய்தார்? ஏன் திறைசேரியின் செயலாளர் இராஜிநாமா செய்தார்? அரசு தரப்பில் இருந்த 42 பேர் சுயாதீனமாக இயங்குகின்றார்கள் என்று ஏன் அறிவித்தார்கள்? ஒரு நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பும் எதிரணியும் இருப்பதுதான் ஜனநாயக முறைமை. இங்கு ஆளும் தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் மூன்றாவது ஒரு தரப்பு இருக்கின்றது – சுயாதீனக் குழு என்று சொல்லிக்கொண்டு. இவையெல்லாம் கேலிக்கூத்தானவை. இந்த நிலைமையும் இந்த நாடாளுமன்றமும் கூட மக்கள் ஆணையை இழந்துவிட்டது என்பதற்குச் சான்றுதான்.
தார்மீக ரீதியில் இந்த நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஆகிவிட்டது. அதை இனி முறையாகக் கலைப்பதுதான் எஞ்சி இருக்கின்றது.
இங்கு இருக்கும் ஒவ்வொரு எம்.பியும் தம் பாட்டில் சுயாதீனமாக – சுயேச்சையாகச் செயற்படுகின்றார்கள் என அறிவிக்கின்றார்கள். அதனால் இந்த நாடாளுமன்றம் செயலிழந்து விட்டது என்பதுதான் அர்த்தம்.
ஆகவே, ஜனாதிபதி நிச்சயமாக பதவியை விட்டு விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும். மிகப்பெரிய பொருளாதார மோச நிலைமை நாட்டுக்கு ஏற்படுவதற்கான தவறை இழைத்த மிகப் பெரிய குற்றவாளி ஜனாதிபதி. அதனால் அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
நாடாளுமன்றம் கூட அதன் நம்பகத்தன்மையையும் ஆணையையும் இழந்துவிட்டது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்றீர்கள். இப்போது அவை எங்கே? இப்போது உங்களிடம் இருப்பது குழுக்கள்தான். நாடாளுமன்ற சரித்திரத்திலேயே இல்லாதவாறு பல்வேறு குழுக்கள், பல்வேறு தரப்புகள் இயங்கி நாடாளுமன்றத்தின் நம்பிக்கையையே தகர்க்கும் நிலைமை.
இந்த நிலைமையை நீங்கள் மாற்றாத வரை நாட்டின் பொருளாதாரத்தைக் கொஞ்சம் கூட உங்களால் உயர்த்த முடியாது. அதுதான் யதார்த்தம்.
எல்லா நிறுவனங்களும் நீங்கள் இத்தகைய நெருக்கடியிலிருந்து மீளுவதானால் அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் என்று வலியுறுத்துகின்றன. அரசியல் ஸ்திரத்தன்மை எப்படி வரும்? பல்வேறு நபர்களின் தலைமைகளின் கீழ் பல்வேறு சுயேச்சைக் குழுக்கள் – சுயாதீன குழுக்கள் தன்பாட்டில் இயங்குமானால் இந்த நாடாளுமன்றத்தில் எவ்வாறு அரசியல் ஸ்திரத்தன்மை வரும்? அதனால் நாடாளுமன்றத்தையும் கலைக்க வேண்டும்.
மக்கள் தீர்வுக்காக எங்களை எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், நாங்களோ பிரச்சினைகளின் பங்குதாரர்களாக இருக்கின்றோம். இந்த வடிவத்தில் இருந்து எங்களால் மக்களுக்கு எந்தத் தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதுதான் உண்மை.
நாங்கள் மக்களின் பிரச்சினையைப் பற்றிப் பேசாமல், எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன, எங்கள் பாதிப்பு, அது, இது என்று ஏதோ எல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். எங்களால் எந்தத் தீர்வையும் தர முடியாது, இந்த ஜனாதிபதியையும் இந்த நாடாளுமன்றத்தையும் வைத்துக்கொண்டு நாங்கள் மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை. தீர்க்க மாட்டோம். அரசியல் ஸ்திரத்தன்மையையும் தீர்வையும், ஏற்படுத்தாமல் நாங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு பல மில்லியன் டொலர் இழப்பு ஏற்படும் என்ற உண்மையை நாங்கள் மறக்கக் கூடாது.
எங்களால் தீர்வு தர முடியாது என்பதால் நாங்களாகவே இந்த நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது என்ற தீர்மானத்தை எடுத்து, ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது குறித்து பேசலாம், பேசவேண்டும் என்று ஜனாதிபதியும் பிரதமரும் கடந்த மாதம் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், இப்போது அதிலிருந்து அவர்கள் பின்வாங்கி விட்டார்கள்.
20ஆவது அரசமைப்புத் திருத்தம் கூட வராது என்ற நிலையே நீடிக்கின்றது” – என்றார்.