தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. பள்ளிகளை திறப்பதில் சிக்கல்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
சென்னையில் தனியார் மருத்துவமனையில் முதியவர்கள் கீழே விழுவதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தான நிகழ்வில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, கொரோனா தொற்று தமிழகத்தில் தொடர்ந்து கூடிக் கொண்டு இருக்கிறது. சென்னையில் 22 இடங்களில் கிளஸ்டர் உள்ளது. தொற்றின் வேகம் அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்று கூறி விட்டு, தற்போது போட வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் அப்படி கூறவே இல்லை. எப்போதும் முக கவசம் அணிவது கட்டாயமே.
தமிழகத்தில் 42 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி இன்னும் செலுத்தவில்லை. 1.22 கோடி பேர் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்தவில்லை.
12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளி திறந்த பிறகு கோர்பவேக்ஸ் இரண்டாவது டோஸ் செலுத்தப்படும். தொடர்ந்து, கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், எந்த புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது. அதற்கான அவசியமும் இல்லை.
கொரோனா பரவல் அதிகரித்தாலும் 100 முதல் 200 பேர் பாதிப்பு என்ற அளவில் தான் உள்ளது. எனவே பள்ளிகளை திறப்பதில் பிரச்னை இல்லை என்றார்.
மேலும், பூஸ்டர் டோஸ் விலை தனியார் மருத்துவமனைகளில் ரூ.388 மட்டுமே. அதற்கு மேல் விற்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.