ஜம்மு காஷ்மீரில் இருதரப்புக்கு இடையே மோதல் போக்கு நிலவுவதால் ஊரடங்கு அமல்
ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தின் பதேர்வாஹ் பகுதியில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டு கொடி அணி வகுப்பு நடத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முமகது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து கூறி, அன்மையில் பாஜகவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவின் பேச்சுக்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு பிறகு அங்கு குழுமி இருந்தவர்கள் சட்டவிரோதமான முறையில் இந்துக்களுக்கு எதிரான கோஷங்களையும் மிரட்டல்களையும் எழுப்பியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மத துவேஷம் செய்யும் விதமாக கூட்டத்தினர் கோஷம் எழுப்பிய காணொலி சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் இந்துக்களும் வீதிகளில் இறங்கி பாதுகாப்பு கேட்டும், கோஷம் எழுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியதால், அங்கு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. அத்துடன், பந்தேர்வாஹ் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
வழக்கு குறித்து காவல்துறை கூறுகையில், ‘மத நம்பிக்கைகள் குறித்து அவதூறு பேசி மோதலை தூண்டும் செயலில் ஈடுபட்டதற்கு இந்திய தண்டனை சட்டம் 295-ஏ, 506 சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், சட்டத்தில் தங்கள் கையில் எடுக்க நினைக்கும் யாரையும் காவல்துறை விட்டு வைக்காது’ எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.