புதுச்சேரி கடலை வந்தடைந்தது சொகுசுக் கப்பல் – அனுமதி மறுப்பு
சென்னையில் கடந்த சனிக்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த சொகுசு கப்பல் விசாகப்பட்டினம் சென்று, இன்று புதுச்சேரி வந்துள்ளது. புதுச்சேரியில் கப்பலை அனுமதிக்கக்கூடாது என காங்கிரஸ், அதிமுக மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது கப்பல் புதுச்சேரி கடல் பகுதிக்கு வந்துள்ளது.
கப்பலில் சூதாட்டம் நடைபெறுவதால் புதுச்சேரியில் கப்பலை அனுமதிக்கக்கூடாது, மீறினால் கலாச்சாரம் சீர்குலையும் என பலரும் வலியுறுத்தும் நிலையில், கப்பல் 12 நாட்டிக்கல் மைல் தாண்டி தான் நிற்கும். அதற்கு மாநில அரசு அனுமதி தேவையில்லை. பயணிகளை இறக்க தான் அனுமதி தேவை. அதே நேரத்தில் சூதாட்டம் நடந்தால் அனுமதிக்க முடியாது என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
மேலும், 16 நாட்டிகல்லுக்கு மேலே சென்றால் தான் கேசினோ விளையாட்டு மதுபானங்கள் வழங்கப்படும், என கப்பல் தரப்பினர் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த கப்பல் புதுச்சேரி கடற்கரையில் 3 நாட்டிகல் அளவில் நிற்கிறது.
இது வரை கப்பலுக்கு அனுமதி வழங்காத நிலையில் பயணிகள் யாரேனும் கரை இறங்கினால் போராட்டத்தில் ஈடுப்பட போவதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், புதுச்சேரியில் பயணிகளை ஏற்றி இறக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.