ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொலைபேசி வாயிலாக அழைத்துப் பேசி வாழ்த்து.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘விக்ரம்’ படம் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப் படத்தில் கமல்ஹாசன் நடிப்பு பெரியளவில் பேசப்படுகிறது.
சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் ரசிக்கும்படியாக நடித்திருக்கிறார்கள். கமல்ஹாசன் நடிப்பில் 4 வருடங்களுக்குப் பிறகு வெளியான இந்தப் படம், இதுவரை ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்திருக்கிறது. இந்தநிலையில் ‘விக்ரம்’ படத்தை ரஜினிகாந்த் பார்த்துள்ளார்.
இதில் கமல்ஹாசன் நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன ரஜினிகாந்த், உடனடியாக தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அப்போது, ‘கலக்கிட்டீங்க கமல், படம் ரொம்ப சூப்பரா இருக்கு’ என்று பாராட்டி கூறியிருக்கிறார். படக்குழுவினர் அனைவருமே சிறப்பாக உழைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்போது ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கும் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். உலகநாயகனை, சூப்பர் ஸ்டார் மனம் திறந்து பாராட்டிய தகவலால் இரு தரப்பு ரசிகர்களுமே கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.