பாலஸ்தீனர்களின் நண்பன் புசாகோ ஷிகனோபு , மோசமான பயங்கரவாதி? : சண் தவராஜா

இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சரான ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருந்ததை தமிழ்கூறும் நல்லுலகம் அண்மையில் கொண்டாடித் தீர்த்தது.
அப்பாவியான அவர் தேவையின்றி சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறும் ஒரு சாரார் அவரது விடுதலையை வரவேற்றுள்ள நிலையில், அவர் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் ஒரு சாராரும் உள்ளதை மறுத்துவிட முடியாது. தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோரை அல்லது அவ்வாறு ஈடுபட்டதாக நம்பப்படுவோரைப் பற்றிய ஒன்றுக்கு ஒன்று முரணான பார்வைகள் உலகில் உள்ளமை இயற்கையே. ஒருவருக்கு விடுதலை வீரராகத் தெரிபவர் இன்னொருவருக்குப் பயங்கரவாதியாகத் தெரிகின்றார்.
ஒன்றுக்கொன்று மாறுபாடான பார்வையைக் கொண்டுள்ள இந்த உலகில் அண்மையில் விடுதலையான ஒருவரைப் பற்றிய கட்டுரையே இது.
70கள் மற்றும் 80களில் மிகவும் அறியப்பட்ட யப்பானிய செம்படை என்ற அமைப்பின் இணை நிறுவனர் எனக் கருதப்படும் புசாகோ ஷிகனோபு என்ற பெண்மனி 20 வருட சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டு தனது 76ஆவது வயதில் மே மாதம் 28ஆம் திகதி விடுதலையாகி இருந்தார்.
70களில் உலகின் பல பாகங்களிலும் சுதந்திரக் காற்று சுழன்றடித்துக் கொண்டிருந்தது. வியட்நாமில் அமெரிக்கா இழைத்துக் கொண்டிருந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலகின் பல பாகங்களிலும் மாணவர்களும், இளையோரும், தொழிலாளிகளும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் கூறுகளாக உலகம் முழுவதிலும் நடைபெற்ற விமானக் கடத்தல்கள், பணயக் கைதிகள் சிறைப்பிடிக்கப்படல் மற்றும் குண்டு வெடிப்புகள் என்பவை நாளாந்தச் செய்திகளாக விளங்கிய காலம். பாலஸ்தீன விடுதலைக்காக பாலஸ்தீனியர்கள் மாத்திரமன்றி உலகின் பல நாடுகளிலும் செயற்பட்ட புரட்சிகர ஆயுதக் குழுக்களும் தத்தம் வல்லமைக்கு ஏற்பப் போராடிய காலம்.
அந்தக் காலகட்டதில் உருவான அமைப்புதான் யப்பானிய செம்படை. இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தில் யப்பானியப் படையில் மேஜராகப் பணியாற்றி ஓய்வுபெற்று பின்னாளில் பலசரக்குக் கடையொன்றின் உரிமையாளராக விளங்கிய வறிய தந்தைக்கு மகளாகப் பிறந்தவரே புசாகோ ஷிகனோபு. வியட்நாம் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், யப்பானில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்வதைக் கண்டித்தும் டோக்கியோப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டங்களில் தனது 20ஆவது வயதில் கலந்துகொண்ட நிலையில் அவர் இடதுசாரிக் கருத்துக்களால் கவரப்பட்டார். தொடர்ந்து தனது 25ஆவது வயதில் நாட்டைவிட்டு வெளியேறி பாலஸ்தீன மண்ணில் கால்பதித்தார். 1971இல் லெபனானுக்கு வருகைதந்த அவர் யப்பானிய செம்படை அமைப்பைத் தோற்றுவித்தார். பாலஸ்தீன அமைப்புகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அவரது அமைப்பு மேற்கொண்ட செயற்பாடுகள் இஸ்ரேலின் கோபத்தை அளவுக்கு அதிகமாகவே சம்பாதித்திருந்தன.
1972 இல் டெல் அவிவ் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், 1975இல் மலேசியா கோலாலம்பூரில் அமெரிக்கத் தூதரகம் மீதான முற்றுகை, 1988 இல் இத்தாலி நேப்பில்ஸ் நகரில் அமெரிக்கப் படைத்தளம் மீதான கார்க் குண்டுத் தாக்குதல் என அறியப்பட்ட பல படை நடவடிக்கைகளை இந்த இயக்கம் மேற்கொண்டிருந்தது. ஜோர்ஜ் ஹபாஸ் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை வெகுஜன முன்னணியோடு இணைந்து செயற்பட்ட யப்பானிய செம்படை 1970 மார்ச் முதல் 1988 ஏப்ரல் வரை மிகவும் தீவிரமாகச் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1973இல் பாலஸ்தீன மண்ணில் ஷிகனோபு தனது துணையைத் தேடிக்கொண்டார். இதன் விளைவாக அவர்களுக்கு ஒரு மகள் பறந்தார். லெபனான் பல்கலைக் கழகப் பட்டதாரியான மே ஷிகனோபு தற்போது யப்பானில் ஒரு ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகின்றார்.
40 வரையான தீவிர உறுப்பினர்களைக் கொண்டிருந்த யப்பானிய செம்படை படிப்படியாகத் தனது உறுப்பினர்களை இழந்துவந்த நிலையில் 30 வருடத் தலைமறைவு வாழ்க்கையின் பின்னர் நாடு திரும்பிய ஷிகனோபு 2000மாம் ஆண்டில் ஒஸாகா நகரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். 1974 செப்டம்பர் 13இல் நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்திருந்த பிரான்ஸ் தூதுவராலாயம் முற்றுகையிடப்பட்ட வழக்கில் இவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 100 மனித்தியாலங்கள் நீடித்த இந்தப் பணயக் கைதிகள் சிறைப்பிடிக்கப்பட்ட தாக்குதலில் அவர் நேரடியாகப் பங்கு பற்றியிராத நிலையிலும், தாக்குதலுக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சிறையில் இருந்த நிலையிலே 2001 ஏப்ரலில் தமது இயக்கத்தைக் கலைக்கும் அறிவிப்பை அவர் வெளியிட்டார். அது மாத்திரமன்றி தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அப்பாவி மக்களைத் துன்புறுத்தியதற்காக மன்னிப்பும் கோரியிருந்தார்.
சிறையில் இருந்து விடுதலையான அவரை அவரது மகளும், அவரது நண்பர்களும், ஆதரவாளர்களும், ஊடகர்களும் வரவேற்றனர். “நாங்கள் ஷிகனோபு மீது அன்பு செலுத்துகிறோம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை அவர்கள் தாங்கியிருந்தார்கள்.
அவரது விடுதலையை ஒட்டி பாலஸ்தீன இளையோர் அமைப்பு வெளியிட்ட செய்தி “யப்பானிய விடுதலைப் போராளி புசாகோ ஷிகனோபு 20 ஆண்டுகாலத் தடுத்து வைப்பின் பின்னர் இன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் பாலஸ்தீன மக்களதும் அவர்களது போராட்டத்தினதும் ஆயுட்காலத் தோழர்” என்பதாக அமைந்திருந்தது.
ஆனால், பொதுத் தளங்களில் புசாகோ ஷிகனோபு தொடர்பான செய்திகள் அவரை ஒரு மோசமான பயங்கரவாதியாகச் சித்தரிப்பதாகவே இன்றுவரை உள்ளன. ஒரு சாராருக்கு விடுதலைப் போராளியாகத் தெரிபவர் இன்னோரு சாராருக்கு மோசமான பயங்கரவாதியாகத்
தெரிவதில் வியப்பொன்றும் இல்லை. இன்றைய உலகில் எழுதப்படாத விதியாக அதுவே உள்ளதை மறுப்பதற்கில்லை. அது ஷிகனோபு விடயத்திலும் பொருந்திப் போகின்றது.