ராஞ்சி கலவரத்தில் இருவர் பலி – மாநில அரசுகள் உஷாராக இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டது. இதில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற கலவரத்தில் இருவர் கொல்லப்பட்டனர். போராட்டத்தை ஒடுக்க கலவரக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடி நடத்தினர்.
இதில் பாதுகாப்பு படையினர் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் காவல்துறை தரப்பிலும் பலரும் படுகாயம் அடைந்தனர். பொது மக்கள் தரப்பிலும் 13க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ராஞ்சியின் மூத்த காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர குமார் ஜா தலையில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பதற்றமான சூழல் இருப்பதன் காரணமாக இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
அதேபோல் டெல்லி, உத்தரப் பிரதேசம், ஜார்காண்ட், குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நேற்று போராட்டம் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரின் பூன்ச் பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுரா பகுதியில் கலவரம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலவரத்தில் ஈடுபட்ட 227 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கலவரம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு நிலை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயற்சி நடைபெறுவதாகவும் தேவைப்படும்பட்சத்தில் மாநில அரசுகளுக்கு துணை ராணுவப்படையை அனுப்பு தயாராக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதேபோல் கலவரத்தை தூண்டும் விதமாக வீடியோக்கள் மற்றும் பேச்சுக்களை பதிவிடுவோரை காவல்துறை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.