உம்ரன் மாலிக்கிற்கு இடம் கிடைக்குமா..? இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
பெரும்பாலான சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால், இந்த தொடருக்கான இந்திய அணியை ரிஷப் பண்ட் வழிநடத்தி வருகிறார். ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான முதல் போட்டியில் 211 ரன்கள் குவித்த போதிலும், பந்துவீச்சில் மிக மோசமாக செயல்பட்டதால் தோல்வியை சந்தித்தது.
இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணி முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி கட்டாக்கில் நாளை (12-6-22) நடைபெற உள்ளது.
முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் தோல்வியில் இருந்து மீள வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பதால், இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இரண்டாவது போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பிடிப்பார்கள் என தெரிகிறது, மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம் என்றே பெரும்பாலான முன்னாள் வீரர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் உம்ரன் மாலிக்கிற்கு இரண்டாவது போட்டிக்கான ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என்றே தெரிகிறது.
பந்துவீச்சாளர்களாக கடந்த போட்டியை போன்று இந்த போட்டியிலும் புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல் மற்றும் ஆவேஸ் கான் ஆகியோரே இடம்பெறுவார்கள். அக்ஷர் பட்டேலை நீக்கிவிட்டு ரவி பிஸ்னோய்க்கு இடம் கொடுக்க வேண்டும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் பேசி வந்தாலும், இரண்டாவது போட்டி மிக முக்கியமானது என்பதால் இந்திய அணி தேவையற்ற ரிஸ்க் எதுவும் எடுக்காது என்றே தெரிகிறது.
இஷான் கிஷன், ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், ஹர்சல் பட்டேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஸ் கான்.