ரயில் நிலையத்துக்குள் பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டம்.. கல்லூரி மாணவர்கள் சிறையில் அடைப்பு
திருவள்ளூர் பொன்னேரியில் அரசு கல்லூரி ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக பேண்ட் வாத்தியத்துடன் ரயில் நிலையம் வந்த கல்லூரி மாணவர்கள் பட்டாசு சரவெடி வெடித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தில் மாணவர்கள் 7 பேரை கைது செய்த ரயில்வே காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்லூரியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் ரயில்கள் மூலம் பேண்டு வாத்தியம் முழங்க ரயில் நிலையம் வந்து இறங்கினர்.
அப்போது பொன்னேரி ரயில் நிலையத்தில் பட்டாசு சரவெடிகள் வெடித்ததோடு அல்லாமல் பேண்ட் வாத்தியங்கள் இசைக்க மாணவர்கள் குத்தாட்டம் போட்டு ஆட்டம் ஆடி ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே காவலர் ஒருவர் இதனைத் தட்டிக் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் எளாவூரைசேர்ந்த ரஞ்சித், ஜார்ஜ் காயலார் மேடு பகுதியைச் சேர்ந்த சஞ்சய், ரஞ்சித், அஜித். மகேஷ், ரஞ்சித் உள்ளிட்ட 7 மாணவர்களை கைது செய்தனர். அவரிடம் இருந்து 75 கிராம் பட்டாசு உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து ஆபத்தான முறையில் தண்டவாளம் மற்றும் படியில் பயணம் செய்தது, பயணிகளை அச்சுறுத்தியது, பட்டாசு வெடித்து பயணிகளுக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணைக்கு பின்னர் கும்மிடிபூண்டி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மாணவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கும்மிடிபூண்டி மார்க புறநகர் ரயில்களில் கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு ரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.