தமிழகத்தில் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்.. தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிரம்
தமிழகத்தில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்துவரும் சூழலில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக இன்று மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவத் தொடங்கியது. தொடக்கத்தில் பாதிக்கப்படுவர்கள் மற்றும் உயிரிழப்பு அதிகமாக இருந்ததால் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் பணி இந்தியாவில் தொடங்கியது.
தமிழகத்தை பொறுத்தவரை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 28 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 90 சதவீதத்துக்கும் அதீகமானோர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். இந்நிலையில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நேற்று முன் தினம் 200 என்ற எண்ணிக்கையை தாண்டி தொற்று பதிவான நிலையில், நேற்றும் 217 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதில், கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளை சுகாதாரத்துறை , உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை போன்ற துறைகளை ஈடுபடுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடித்திடவும் போதிய பரிசோதனைகள் தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்றிட பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டது.
2வது டோஸ் தடுப்பூசியை அதிக எண்ணிக்கையிலான மக்கள் செலுத்திக்கொள்ளவில்லை என கூறப்படும் நிலையில், இதனை சரி செய்யும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 1 லட்சம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 3 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன . காலை 7 மணி தொடங்கி மாலை 7 மணிவரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.