ஐடிபிஐ வங்கி தனியாா் மயமாக்குவதற்கான ஏலம் அடுத்த மாதத்தில் வெளியாக வாய்ப்பு
ஐடிபிஐ வங்கியை தனியாா்மயமாக்குவதற்கான பூா்வாங்க ஏல நடைமுறையை மத்திய அரசு அடுத்த மாதத்தில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் கூறியுள்ளதாவது:
ஐடிபிஐ வங்கியை தனியாா்மயப்படுத்துவதற்கான மேலும் ஒரு கட்ட பேச்சுவாா்த்தையை ரிசா்வ் வங்கியுடன் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதையடுத்து, அந்த வங்கியை வாங்க விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஏல விண்ணப்பங்களை மத்திய அரசு ஜூலை மாத இறுதியில் கோர அதிக வாய்ப்புள்ளது.
மேலும், ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசின் பங்கு மூலதனம் 45.48 சதவீதமாகவும், எல்ஐசியின் பங்கு மூலதனம் 49.24 சதவீதமாகவும் உள்ளன. இதில், எவ்வளவு பங்குகளை விற்பனை செய்வது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றாா் அவா்.
ஐடிபிஐ வங்கியின் நிா்வாக கட்டுப்பாட்டை மாற்றுவதற்கும், பங்கு விற்பனையை மேற்கொள்வதற்கும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கடந்த ஆண்டு மே மாதம் கொள்கையளவில் ஒப்புதல் தெரிவித்தது.