எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் நெருக்கடி தீவிரம்..?
இந்தியாவிடமிருந்து கடன் அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டு வந்த எரிபொருளில், கடைசி எரிபொருள் தாங்கிய டீசல் கப்பல் இம்மாதம் 16ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.
இதன் பின் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் எரிபொருள் உதவி பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை இந்தியாவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதே நேரம், நாட்டில் எரிபொருள் நெருக்கடி நாளை முதல் மோசமடையுமென பெற்றோலிய தொழிற்சங்கங்கள் கருத்துக்களை முன் வைத்துள்ளன.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் புள்ளி விபரங்களின் படி இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நாட்டில் டீசல் கிடைக்கும் என பெற்றோலிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
பெற்றோல், டீசல் பற்றாக்குறை சிக்கலின் காரணமாகவே நாளை 13ஆம் திகதி அரச நிறுவனங்கள், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.