காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துமனையில் அனுமதி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த ஜூன் 2 கோவிட் பாதிப்பு உறுதியானது. இதையடுத்து இவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கோவிட் பாதிப்பு தொடர்பான பிரச்சனைகளில் அவதியுற்று வரும் சோனியா காந்தி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ரன்தீப் சுர்ஜேவாலா தனது ட்வீட்டில், ‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோவிட் தொடர்பான பிரச்னை காரணமாக கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவமனையின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவர் உடல் நலன் தொடர்பாக அக்கறை மற்றும் வாழ்த்து செய்தி அனுப்பிய காங்கிரஸ் கட்சியினர் மற்றும் நலம் விரும்புகளுக்கு நன்றி’ எனக் கூறியுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்காக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சோனியா காந்தி கடந்த ஜூன் 8ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால் கடந்த ஜூன் 2ஆம் தேதி சோனியா காந்திக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராக விலக்கு கோரியிருந்தார். இதையடுத்து சம்மன் தேதியை ஜூன் 23ஆம் தேதிக்கு அமலாக்கத்துறை தற்போது ஒத்திவைத்துள்ளது. ராகுல் காந்தி நாளை அமலாக்கத்துறை முன் ஆஜராகவுள்ளார்.