திருப்பதியில் அமைச்சர் ரோஜாவின் கார் ஓட்டுநர், பாதுகாவலர் தடுத்து நிறுத்தம்
ஆந்திர மாநில விளையாட்டுத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு சென்றார். தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று, விஐபி பிரேக் தரிசனத்தில் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், அமைச்சர் ரோஜாவின் கார் ஓட்டுநர் லோகேஷ் மற்றும் அவரின் பாதுகாவலர் ஆகியோர் மகா துவாரம் வழியாக தரிசனத்திற்கு சென்றனர். அவர்கள் பயோமெட்ரிக் மூலம் பக்தர்களின் கைரேகை பதிவு செய்யும் இடத்திற்கு சென்ற போது, அங்கு உள்ளவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் யோகேஷ் மற்றும் பாதுகாவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி பாலி ரெட்டி, அவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடியாது என திருப்பி அனுப்பினர்.
இது குறித்து செய்திகள் வெளியாயின. இது குறித்து, தகவல் அறிந்த அமைச்சர் ரோஜா, தேவஸ்தான அதிகாரிகளிடம் ‘ஏன் என்னுடைய கார் டிரைவர் மற்றும் பாதுகாவலரை தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை’ என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, அவர்கள் தேவஸ்தான விதிமுறைகளின்படி அவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் ரோஜா அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அமைச்சர் ரோஜாவின் கார் ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர்கள் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.