அனைத்து சாலைகளும் சென்னையை நோக்கி… விடுமுறை முடிந்து திரும்பியவர்களால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் அனைவரும் நேற்று சென்னைக்கு திரும்பினர். ஏராளமான வாகனங்கள் சென்னையை நோக்கி படையெடுத்ததால் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பள்ளிகள் முடிந்து கோடை விடுமுறை விட்டதும் சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் விடுமுறையை கழிக்க தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்நிலையில், தமிழகத்தில் இன்று 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் அனைவரும் நேற்று சென்னைக்கு திரும்பினர்.
மேலும், 2 நாள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்களும் நேற்று சென்னை திரும்பினர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி போன்ற தென் மாவட்டங்களில் இருந்து கார்கள், பேருந்து என வாகனங்களில் மக்கள் சென்னையை நோக்கி படையெடுத்தனர். இதனால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
செங்கல்பட்டு – தாம்பரம் இடையேயான 35 கிலோமீட்டர் தூரத்தை கடக்க வாகனங்களுக்கு இரண்டரை மணி நேரம் ஆனது. பரனூர் சுங்கச்சாவடியை கடக்க வாகனங்களுக்கு 15 நிமிடங்கள் வரை ஆனது. ஒருசிலர் நெல்லிக்குப்பம் வழியாக செல்ல முயற்சித்தபோதிலும் கூடுவாங்சேரி அருகே நெரிசலில் சிக்கிக்கொண்டனர். செங்கல்பட்டு- தாம்பரம் சாலையில் நேற்று மாலையில் இருந்து இன்று காலை வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படுகின்றன.