ராஜபக்சக்களின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது – நாமல் எம்.பி. விளாசல்.
“ராஜபக்சக்கள் தத்தமது சுயவிருப்பத்தின் பிரகாரம் பதவிகளிலிருந்து விலகலாம். ஆனால், அவர்களின் அரசியலுக்கு ஒருபோதும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது” – என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“மே 09ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகினார் என்றும், ஜூன் 09ஆம் திகதி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பஸில் ராஜபக்ச விலகினார் என்றும், எனவே ஜுலை 09ஆம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகக்கூடும் என்றும், ராஜபக்சக்களின் அரசியல் முடிவுக்கு வருகின்றது என்றும் சமூக ஊடகங்களில் சில பதிவுகளைப் பார்த்தேன். சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்கள் கூட இந்தப் பதிவுகளை இட்டுள்ளனர்.
இவ்வாறு பதிவுகளை இடுவோர் ஒன்றை மாத்திரம் கவனத்தில்கொள்ள வேண்டும். அதாவது, ராஜபக்சக்கள் தத்தமது சுயவிருப்பத்தின் பிரகாரம் பதவிகளிலிருந்து விலகலாம். ஆனால், அவர்களின் அரசியலுக்கு ஒருபோதும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ராஜபக்சக்களின் அரசியல் பயணம் தொடரும். அந்தப் பயணத்தை எவரும் தடுத்துநிறுத்த முடியாது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராக தற்போதும் மஹிந்த ராஜபக்சவே பதவி வகிக்கின்றார். எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயாராகவுள்ளது. நாடாளுமன்றில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிதான் பெரும்பான்மைப் பலத்துடன் உள்ளது” – என்றார்.