144 நிமிடங்களில் வதோதராவில் இருந்து மும்பைக்கு இதயத்துடன் பறந்து உயிரை காத்த இன்டிகோ விமான குழுவினர்
நாட்டின் முன்னணி விமான போக்குவரத்து சேவை நிறுவனமான இன்டிகோ, குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு 150 நிமிடங்களுக்குள் இதயத்தை கொண்டு வந்து உயிரை காப்பாற்றியுள்ளது. மும்பையில் ஒரு நபருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில், வதோதரவைச் சேர்ந்த நபர் தானம் அளித்த இதயம் இவருக்கு பொருந்தியுள்ளது.
இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மூன்று மணி நேரத்திற்குள் இதயத்தை சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். எனவே, வதோதராவில் இருந்து மும்பைக்கு உயிர்ப்புடன் உள்ள இதயத்தை கொண்டு சேர்க்கும் பணியை இன்டிகோ விமான குழுமம் ஏற்றுக்கொண்டு. ஒரு உயிரைக் காக்கும் சவால் நிறைந்த இந்த செயலை இரண்டு மணி நேரம் 22 நிமிடத்திலேயே(144 நிமிடங்கள்) வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளது இன்டிகோ விமானக்குழு.
இதற்காக இன்டிகோ விமான குழுவுக்கு அந்நிறுவனத்தின் சிஇஓ ரன்ஜோய் தத்தா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க உதவிய க்ளோபல் மருத்துவமனை குழுமத்திற்கும், வதோதரா மற்றும் மும்பையில் உள்ள விமான நிலைய ஊழியர்களுக்கும், இன்டிகோ விமான குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். ஒவ்வொரு உயிரும் விலை மதிக்க முடியாதது. விலை மதிக்க முடியாத ஒரு உயிரை காக்கும் பங்களிப்பில் இன்டிகோ ஈடுபட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் கூறியுள்ளார். அதேபோல், இன்டிகோ நிறுவனத்தை பாராட்டி க்ளோபல் மருத்துவமனை குழுமமும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த மே 20ஆம் தேதி இதேபோன்று, புனேவில் இருந்து ஹைதராபாத்திற்கு உயிர்ப்பு தன்மை கொண்ட நுரையீரலை இன்டிகோ நிறுவனம் குறிப்பிட்ட நேரத்திற்குள் வெற்றிகரமாகக் கொண்டு சேர்த்தது.