கேரள தங்க கடத்தல் விவகாரம்: பினராயி விஜயன் பயணித்த விமானத்திற்குள் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பயணித்த விமானத்திற்குள் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இது திட்டமிட்ட வன்முறை முயற்சி என முதலமைச்சர் குற்றம் சாட்டிள்ளார். இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.
தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார். இதையடுத்த் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி உட்பட எதிர் கட்சிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
ஆயினும், பல்வேறு இடங்களில் முதலமைச்சர் செல்லும் பாதைகளில் காங்கிரஸ், பாஜக கட்சி தொண்டர்கள் முதல்வருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், கருப்பு கொடி காட்டியும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் கண்ணூரில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அந்த விமானத்திற்குள் இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர் காங்கிரஸ் மட்டனூர் தலைவர் ஃபர்சின் மஜீத், மாவட்ட செயலாளர் நவீன்குமார் ஆகியோர் விமானத்தில் புகுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இளைஞர் காங்கிரஸ் மட்டன்னூர் செயலாளர் சுனித்தும் உடனிருந்தார்.
இந்த போராட்டத்திற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் பதில் அளித்துப் பேசுகையில், கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானத்தில் நடந்தது கண்டிக்கத்தக்க சம்பவம் என்று முதல்வர் கூறினார். காங்கிரஸ் தலைவர்களின் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை நிரூபிப்பதாக முதல்வர் கூறினார்.
போராட்டத்தின் போது, எதிர்க்கட்சிகளின் வலையில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் இடதுசாரி தொண்டர்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில காலமாக யுடிஎஃப் (UDF) தலைமை தேவையற்ற கலவரத்தை தூண்டும் வகையில் போராட்டங்கள் முன்னெடுத்து வருவதாகவும் இதன் தொடர்ச்சியே இந்த சம்பவம் என்றும் முதலமைச்சர் குற்றம் சாட்டினார்.
இந்த சம்பவம் குறித்து கூறிய ஈ.பி.ஜெயராஜன், இது ஜனநாயகத்திற்கும் மக்களுக்கும் விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்க முடியும். நாடு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் குறிக்கோள். இதற்கு பாஜக வின் துணை இருப்பதாகவும், தீவிரவாத அமைப்புகளே இவ்வாறு செயல்பட்டுள்ளன என்றும், காவல்துறையை ஏமாற்றி விமானத்தில் புகுந்தது பயங்கரவாதத்திற்கு இணையானது என்றும் கூறினார். மேலும், முதலமைச்சரை தாக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது என்றும் நாளை வெடிகுண்டு வைப்பார்கள் என்றும் இது அரசியல் சதி என்றும் கூறினார்.
இந்நிலையில், விமானத்திற்குள் புகுந்து முதலமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏறப்படுத்தியது. இதனால், காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் இந்திரா பவன் மாநில தலைமை அலுவலகம் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
அதே போல மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் தொண்டர்கள் பல இடங்களில் மோதலில் ஈடுப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி, இன்று (14-06-2022) கேரளா மாநிலத்தில் கருப்பு நாள் அனுசரிக்க போவதாக கட்சி மேலிடம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.