நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்றும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல் துறையினர் தள்ளிவிட்டதில் விலாஎலும்பு உடைந்ததாக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இயக்குனர்களாக உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனம் மூலம், சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. அது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. சோனியா காந்தி தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராவதற்காக ராகுல் காந்தி, தனது தங்கை பிரியங்கா காந்தியுடன் நேற்று காலை பேரணியாக சென்றார். ஆனால், பேரணிக்கு அனுமதி அளிக்கப்படாததால், ராகுல் காந்தி காரில் ஏறிச் சென்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆஜரானார். 4 மணி நேர விசாரணைக்குப் பின் உணவு இடைவேளைக்காக வெளியே வந்த ராகுல் காந்தி, ஸ்ரீகங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தியை சந்திப்பதற்காக, பிரியங்காவுடன் சென்றார்.
இதையடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் மீண்டும் ஆஜராகி, அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்த விசாரணை இரவு 9.30 மணிவரை நீடித்தது. பின்னர் ராகுல் காந்தி கிளம்பிச் சென்றார். இதன்படி, சுமார் 10 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. எனினும், பல்வேறு கேள்விகள் இன்னும் கேட்கப்படாததால், அவரை மீண்டும் இன்று ஆஜராக அமலாக்கத் துறையினர் சம்மன் அளித்துள்ளனர்.
இதனிடையே, அமலாக்கத் துறை அலுவலகம் அருகே காலையில் திரண்டிருந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிப்பதற்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு பயன்படுத்துவதாக, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
இதேபோல, ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல் துறையினர் தள்ளிவிட்டதில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் இடது விலா எலும்பு உடைந்ததாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிதம்பரம், விலா எழும்பு முனைப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதால், 10 நாட்களில் குணமாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது நலமுடன் இருப்பதாகவும், இன்று பணிக்கு திரும்ப உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
காவல் துறையினரின் கைது நடவடிக்கை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மீது காவல் துறையினர் கடுமையாக தாக்கியதாக தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், ஜனநாயகம் நசுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மோடி அரசை இந்த நாடு மன்னிக்காது என்றும் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.